வீட்டிற்குள் புகுந்த பாம்பை கடித்து கொன்று குடும்பத்தையே காப்பாற்றிய நாய்! சுருண்டு விழுந்து இறந்த சோகம்
வீட்டுக்குள் புகுந்த விஷம் கொண்ட நல்ல பாம்பை கொன்றுவிட்டு வளர்ப்பு நாய் உயிரைவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகேயுள்ளது கீழப்பூங்குடி கிராமம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு நாய்கள் என்றால் அலாதி பிரியம். இவர் வீட்டில் 4 நாய்களுக்கும் மேலாக வளர்த்துவரும் நிலையில் செவலை என்கிற நாய் மிகவும் நன்றியுள்ள நாயாகவும் துடிப்பாகவும் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த புதனன்று மாலை நேரத்தில் குழந்தைகள் வீட்டு வாயிலில் விளையாடிக் கொண்டிருந்த போது நல்ல பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது.
அதனை கண்ட நாய் குரைத்து அந்த பாம்பினை கடித்து குதறி கொன்றது. பாம்பு கொத்தியதில் விஷம் பரவிய நாய் மயங்கி விழுந்து கிடந்தது. சரவணன் குடும்பத்தினர் ஒக்கூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு யாரும் இல்லாததால் சிவகங்கை கால்நடை மருத்துவமனைவந்துள்ளனர்.
அங்கு நாயை பரிசோதித்த மருத்துவர்கள் அது இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் கண்ணீர் மல்க நாய் உடலை வீட்டிற்கு அருகே மலர் துாவி அடக்கம் செய்தனர்.