ரோசப்பட்டு நாம் தமிழர் கட்சியை கலைக்க வேண்டாம்.., சீமானை விமர்சிக்கும் பாஜக
நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுவதாக சீமான் கூறிய நிலையில், தற்போது அதனை பாஜக விமர்சித்துள்ளது.
சீமான் கூறியது
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து வருகிறது. அந்தவகையில், தற்போது நாம் தமிழர் கட்சிக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், தேர்தல் முடிவு வரும் ஜூன் 4 -ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், தென்மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய சக்தியாக வரும் என்று அண்ணாமலை கூறுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஜூன் 4 -ம் திகதிக்கு பிறகு பாஜக பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு என்று தெரிந்து விடும்.
கூட்டணி இல்லாமல் தனித்த பாஜகவின் வாக்குகள் நாம் தமிழர் கட்சியை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிடுகிறேன்" என்றார்.
பாஜக விமர்சனம்
சீமான் பேசிய கருத்துக்கு மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால் கட்சியை கலைத்து விடுவதாக வாய்ச்சவடால் விட்டிருக்கும் சீமானுக்கு வேண்டுகோள்.
நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழப்பதையும், பாஜக பல தொகுதிகளில் வெற்றி பெறுவதையும் உங்கள் கண் முன்னால் பார்க்க இருக்கிறீர்கள்.
ஆனால், அதற்கெல்லாம் ரோசப்பட்டு கட்சியை கலைத்து விட வேண்டாம். தமிழக அரசியல் களத்தில் நகைச்சுவை உணர்வு, கதை சொல்லும் பண்பு போன்றவை காணாமல் போய்விடும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |