புடின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இங்கிலாந்து வந்தடைந்துள்ள விசேஷ விமானம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரஸ்ஸல்ஸ் வந்துள்ள நிலையில், புடின் ஒருவேளை அணு ஆயுதத்தை பிரயோகிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணுக்கதிர் வீச்சைத் தாக்குப்பிடிக்கக்கூடிய ’பறக்கும் பென்டகன்’ என்று அழைக்கப்படும் விசேஷ விமானம் பிரித்தானியா வந்தடைந்துள்ளது.
அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த அந்த விமானம், ஒரு வேளை அணு ஆயுத தாக்குதல் துவங்கினால், அந்த நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி அந்த விமானத்தில் பறந்தவண்ணம் அமெரிக்க அணு நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் அணு ஆயுதங்கள் ஏவும் இராணுவ தளங்கள் ஆகிய இடங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் வகையில் வசதிகள் கொண்ட விமானம் ஆகும். ஆகவேதான், அது பறக்கும் பென்டகன் என அழைக்கப்படுகிறது.
இதுபோன்று அமெரிக்காவிடம் நான்கு விமானங்கள் உள்ள நிலையில், அணு ஆயுதப் போர் உருவாகும்பட்சத்தில், உடனடியாக நடவடிக்கையில் இறங்குவதற்காக, அவற்றில் ஒரு விமானம் எப்போதும் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.
இந்த வாரத் துவக்கத்தில், மூத்த ரஷ்ய அலுவலர் ஒருவர், தங்கள் நாட்டு மக்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், அணு ஆயுதங்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமை உள்ளது என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.