ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: கடும் கோபத்தில் டிரம்ப்
ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தானது பழைய நிலைக்கு படிப்படியாக திரும்பி வருகிறது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முட்டாள்தனமான மீறல் என்றும் டிரம்ப் சாடியுள்ளார்.
டிரம்ப் வழங்கிய தகவல்
ஹார்முஸ் ஜலசந்தியில் ட்ரோன் விமானம் ஒன்று கப்பலில் மேல் தளத்தை தாக்கி சேதம் ஏற்படுத்தியது. இருப்பினும் சம்பந்தப்பட்ட கப்பலால் தொடர்ந்து முன்னேறி செல்ல முடிந்தது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்க படைகள் 3 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் தெரிவித்துள்ள இந்த தகவலில், தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல் பற்றிய விவரங்களையோ அல்லது நேரமோ குறிப்பிடப்படவில்லை.
ஆனால் பிரிட்டிஷ் ராணுவம் வழங்கிய தகவல் படி, வியாழக்கிழமை ஓமன் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் மீது எரிபொருள் ஒன்று விழுந்ததாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இருதரப்பும் சண்டைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் இந்த சூழ்நிலையில் இந்த தாக்குதல் பதற்றத்தை தூண்டிவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |