மதுபானங்களை குடித்துவிட்டு தள்ளாடிய ரக்கூன்: திருடனை கையும் களவுமாக பிடித்த பொலிஸார்
வர்ஜீனியாவில் மதுபானக் கடைக்குள் புகுந்து கைவரிசையை காட்டிய போதையில் தள்ளாடிய ரக்கூன் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.
துணிச்சலான ரக்கூன்
வர்ஜீனியாவில் உள்ள மதுபானக் கடைக்குள் ஊடுருவி, அங்கிருந்த மதுபானங்களை குடித்து விட்டு சேட்டை செய்த ரக்கூன் கையும் களவுமாக சிக்கியுள்ளது.
மறுநாள் காலை மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சேட்டையில் ஈடுபட்ட ரக்கூனை சிறைபிடித்தனர்.

போதையில் தள்ளாடிய ரக்கூன்
அதிகாரி மார்ட்டின் சம்பவம் தொடர்பாக விவரித்த தகவலில், புகார் வந்த மதுபான கடையை ஆராய்ந்த போது, கடைசியில் கடையின் கழிவறையில் ரக்கூன் ஒன்று முழு போதையில் கிடப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
மதுபானத்தை அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, கழிவறைக்கும், குப்பைத் தொட்டிக்கும் நடுவே படுத்து உறங்கி கொண்டு இருப்பதை அதிகாரிகள் கண்டனர்.
உடனடியாக ஹனோவர் கவுண்டி விலங்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் ரக்கூனை கைப்பற்றி அடுத்த நாள் பத்திரமாக காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
ஆதாரம் இல்லை, சேதாரம் மட்டுமே
இந்த சம்பவத்தில் கடைக்காரருக்கு சேதாரம் மட்டுமே மிஞ்சியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் எதுவும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.
ஏனென்றால், ரக்கூன் ஆனது கடையின் மேற்கூரை வழியாக உள்ளே நுழைந்துள்ளது, அப்போது சிசிடிவி கேமராகளை கீழே தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |