30 நொடிகளுக்கு ஒரு மரணம்... பரிதவிக்கும் தேசம்: வெளிவரும் கலங்கடிக்கும் தகவல்
கிழக்கு ஆபிரிக்கா அபாயகரமான உணவு நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், 140 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிர்வாழத் தேவையான உணவுக்காக போராடுகிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைவிரித்தாடும் பஞ்சம்
வடக்கு கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் வாழ்வதற்குத் தேவையான உணவு இல்லாமல் போராடி வருகின்றன. கடந்த ஆண்டு சோமாலியாவில் மட்டும் 43,000 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 22,000 க்கும் மேற்பட்டோர் சிறார்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
Credit: Adam Gerrard
2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மேலும் 34,000 பேர் சோமாலியாவில் இறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி, இந்த ஆண்டு சமீபத்திய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எத்தியோப்பியாவில் 22.6 மில்லியன் மக்கள்,
சூடானில் பத்து மில்லியன், தெற்கு சூடானில் பத்து மில்லியன், சோமாலியாவில் 7.5 மில்லியன் மற்றும் கென்யாவில் 7.5 மில்லியன் மக்கள் கடுமையான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர் என தெரியவந்துள்ளது.
கென்யாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், உணவு பண்டங்களின் பற்றாக்குறையால் பல குடும்பங்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்து தவிப்பதாகவும் கூறப்படுகிறது. கென்யா மக்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடும் மிகவும் பரிதாப நிலையில் உள்ளார்கள்.
Credit: Adam Gerrard
அங்குள்ள பெற்றோர்கள் தங்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் மற்றும் எதிர்வரும் நாட்கள் குறித்து அவர்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சம், பட்டினியால் மரணம்
பஞ்சம் மக்களை மட்டும் பாதிக்கவில்லை, அங்குள்ள கால்நடைகள் அனைத்தும் உணவில்லாமல் மரணமடைவதாகவும், தப்பிப்பிழைத்துள்ள கால்நடைகள் மிக மோசமான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இப்பகுதி முழுவதும் 11 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு கிராமங்களிலும் இதே மோசமான நிலை தான் எனவும், ஒவ்வொரு நாளும் குடும்பங்களில் கொடூரமான பட்டினியால் மரணம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
Credit: Adam Gerrard
கென்ய அரசாங்கம் தேசிய வறட்சி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மக்களுக்கு உதவ முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இக்கட்டான நிலையில், மிகப்பெரிய மாற்றமாக, அங்குள்ள ஆண்கள் தங்கள் மனைவிக்கு கருத்தடை செய்துகொள்ளும் அனுமதியை அளித்துள்ளதாகவும், பல பெண்கள் தற்போது மருத்துவமனைகளை அணுகி கருத்தடை செய்து கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
இளம் வயது திருமணமான பெண்களும் கருத்தடை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர்.
தற்போது செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளை முன்னெடுத்து வருவதாக கூறுகின்றனர்.