தோல்வியடைந்த உக்ரைன்-ரஷ்யா ஈஸ்டர் போர் நிறுத்தம்! பரஸ்பர குற்றச்சாட்டுகளால் பதற்றம் அதிகரிப்பு
உக்ரைன் ரஷ்யா இடையிலான ஈஸ்டர் போர் நிறுத்தம் பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தோல்வியடைந்துள்ளது.
ஈஸ்டர் போர் நிறுத்தம் தோல்வி
உக்ரைனில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தம் தோல்வியடைந்துள்ளது.
உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் போர்நிறுத்தத்தை மீறியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் தொடங்கியிருக்க வேண்டிய இந்த போர் நிறுத்தம், ஆரம்பத்திலேயே இரு தரப்பினரின் குற்றச்சாட்டுகளால் கேள்விக்குறியானது.
உக்ரைன்-ரஷ்யாவின் பரஸ்பர குற்றச்சாட்டுகள்
ரஷ்யா போர்நிறுத்தத்தை கடைபிடித்தால், தானும் அதற்கு கட்டுப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார். ஆனால், உக்ரைன் படைகள் மீது ரஷ்ய படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாகவும், துருப்புக்களை தாக்கியதாகவும், ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தங்கள் படைகள் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தை முழுமையாக மதித்ததாகவும், மாறாக உக்ரைன் தான் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும், இரவு நேர தாக்குதல்கள் மூலமாகவும் போர்நிறுத்தத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் களத்தில் இருக்கும் உக்ரைன் ஆளில்லா விமானப் படைப் பிரிவின் தளபதி ஒருவர் கூறுகையில், "போர்நிறுத்தம் அமலில் இருந்ததாக சொல்லப்பட்ட நேரத்தில் நடந்த சண்டை, 2022 பிப்ரவரியில் ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. உண்மையில் எந்த போர் நிறுத்தமும் நடக்கவில்லை," என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிடம் ரஷ்யா அமைதிக்கு தயாராக இருப்பதை வெளிக்காட்டவே புடின் இந்த போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த போர் நிறுத்தம் விரைவாக முடிவுக்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |