ஒரே வாரத்தில் மூன்று மடங்கான பாதிப்பு எண்ணிக்கை... எச்சரிக்கும் உலக சுகாதார முகமை
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள எபோலா பரவல், அந்நாட்டிற்கு மிக அதிக அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என்று உலக சுகாதார முகமை தெரிவித்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை
எபோலா நோய் பரவல் மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார முகமையின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்; ஒரு வாரத்திற்கு முன்பு முதன்முதலில் இது குறித்து அறிவிக்கப்பட்டபோது 246 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி 65 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் பதிவாகியிருந்த நிலையில்,

தற்போது பாதிப்புகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 750 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று உலக சுகாதார முகமையின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமையன்று, இடுரி மாகாணத்தின் ருவாம்பாராவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே, மருத்துவப் பணியாளர்கள் எபோலா சிகிச்சை மையத்தை அமைத்துக்கொண்டிருந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களுக்கும் மருத்துவப் பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
மருத்துவமனையில் எபோலா பாதிப்பால் மரணமடைந்த உள்ளூர் நபர் ஒருவரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாததால், ஒரு கூட்டம் ஆத்திரமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிகிச்சைகள் ஏதும் இல்லை
எபோலா நோயாளிகளின் உடல்கள், நோய் மேலும் பரவுவதைத் தடுக்க, கடுமையான நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் நோய் பரவல், எபோலாவின் Bundibugyo வகையினால் ஏற்பட்டுள்ளது; இதற்குத் தடுப்பூசிகளோ அல்லது முறையான சிகிச்சைகளோ ஏதும் இல்லை.

பெரும்பாலான பாதிப்புகள் காங்கோவின் இடுரி மாகாணத்தில் பதிவாகியுள்ளன; நாட்டின் பிற பகுதிகளில் ஒரு சில பாதிப்புகளும், அண்டை நாடான உகாண்டாவில் இரண்டு பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது அச்சமூட்டுவதாக இருந்தாலும், நோய் கண்டறிதல் நடவடிக்கைகள் தீவிரமாக செல்படுகிறது என்பதை உறுதி செய்வதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |