ட்ரம்பின் கிரீன்லாந்து கனவுக்கு எதிர்ப்பு... பிரித்தானியா உட்பட 8 ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பு
கிரீன்லாந்தை சொந்தமாக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பிரித்தானியா உட்பட 8 ஐரோப்பிய நாடுகள் மீது டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு வரி விதித்துள்ளார்.
ஆபத்தான விளையாட்டு
ஜனாதிபதி ட்ரம்ப் தனது Truth சமூக ஊடகத்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். உலகம் ஒரு ஆபத்தான சூழலில் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், கிரீன்லாந்தை சொந்தமாக்க சீனா திட்டமிட்டு வருவதாகவும், டென்மார்க்கால் சீனாவை எதிர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிரீன்லாந்து இரண்டு நாய் வண்டிகளால் மட்டுமே பாதுகாக்கப்படுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் என்னவென்றே தெரியாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்கு பயணம் செய்து மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடி வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனாலையே, கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால், அமெரிக்காவிற்கு எதிராக செயல்படும் அந்த 8 நாடுகள் மீதும் 10 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

25 சதவீதமாக அதிகரிக்கும்
பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் இந்த வரி விதிப்பு அமுலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்கும் வரையில் இந்த வரிகள் செல்லுபடியாகும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜூன் 1 ஆம் திகதி முதல் இந்த வரிகள் 25 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுங்க வரிகள் என்பவை ஒரு நாடு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள் ஆகும், மேலும் இவை பொதுவாக வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகின்றன.

இந்த வரிகளை அறிவித்ததன் பின்னர், டென்மார்க் அல்லது வரி விதிப்புக்கு இலக்கான எந்த நாடும் அமெரிக்காவுடன் கிரீன்லாந்து விவகாரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |