எலான் மஸ்கின் டீலை ஏற்கவுள்ள ட்விட்டர் நிறுவனம்!
ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை ஒரு பங்குக்கு 54.20 டொலருக்கு வாங்கும் எலோன் மஸ்க்கின் டீலை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரை ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டாம் என நிராகரித்த எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தையே விலைக்கு வாங்க விரும்புவதாக தெரிவித்தார். இது ட்விட்டர் நிர்வாக உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ட்விட்டர் நிறுவனம் தன் கையில் வந்தால் பல விதமான வசதிகளை வழங்குவேன் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
அதன்படி, ட்விட்டர் நிறுவனத்தை ஒரு பங்கு விலை 54.20 டொலர் என்ற அளவில் விலைக்கு வாங்கதயாராக இருப்பதாகவும், இதுவே தனது சிறப்பான மற்றும் இறுதியான டீல் என்றும் எலான் மஸ்க் அறிவித்தார்.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், எலான் மஸ்க் உடனான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ட்விட்டர் பங்கு விலை 4.74 சதவீதம் உயர்ந்துள்ளது.