விளாடிமிர் புடின் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் நேரில் சந்திப்பார்கள்: துருக்கி தலைவர் தகவல்
ஜனாதிபதி புடின் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்.
உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் நீடிப்பதில் எந்தவொரு தடையும் இல்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ய இருப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் நடவடிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே துருக்கி இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.
துருக்கி, ஐக்கிய நாடுகள் சபை, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே உக்ரைனில் தேங்கி நின்ற பல மில்லியன் டன் தானியங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால் தற்போதைய சூழல் உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போரை தொடங்கும் அளவிற்கு சிக்கலடைந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று அஜர்பைஜானில் இருந்து திரும்பிய துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் செய்தியாளர்களை சந்தித்து, விரைவில் புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவருடனும் தொலைபேசி உரையாடல் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
அதன் பிறகு ரஷ்யா மற்றும் உக்ரைனிய சகாக்களான விளாடிமிர் புடின் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து, பிராந்திய அமைதியை எட்டுவது குறித்து பேச வைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் சில தினங்களில் உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில், தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க எந்த தடைகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசர் ஹரியால் மன்னர் சார்லஸுக்கு எழுந்துள்ள சிக்கல்: பதற்றத்தில் அரண்மனை
இந்த மாத தொடக்கத்தில் புடின் மற்றும் எர்டோகனின் சந்திப்பின் போது ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை கொண்டு செல்வதற்கும் பாதுகாப்பதற்கும் மையம் ஒன்றை உருவாக்கும் யோசனையை முன்மொழிந்தார்.
அத்துடன் அந்த திட்டத்தில் ரஷ்யா மற்றும் துருக்கி இணைந்து செயல்பட ஒத்துக் கொண்டதை எர்கோடன் உறுதிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.