பணிந்தது ஐரோப்பிய ஒன்றியம்... போரிஸ் ஜான்சனின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தடுப்பூசியை தடுப்பதாக விடுத்த மிரட்டலிலிருந்து பின்வாங்கியது
பிரித்தானியாவுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி கிடைக்கிறது, எங்களுக்கு கிடைக்கவில்லை, ஆகவே, மொத்த தடுப்பூசி ஏற்றுமதியையும் தடுத்துவிடுவோம் என சிறுபிள்ளைத்தனமாக மிரட்டிக்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம், சற்று கீழே இறங்கி வந்துள்ளது.
பிரச்சினை என்னவென்றால், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பல்வேறு மையங்களில் தயாரிக்கப்படுகிறது. அவற்றில் ஒன்று பெல்ஜியத்தில் உள்ளது.
பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசி, ஐரோப்பிய ஒன்றியம் வழியாகத்தான் பிரித்தானியாவை சென்றடைய முடியும். ஜனவரியில், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலுள்ள தடுப்பூசி தயாரிப்பு மையங்களில் தயாரிப்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஆஸ்ட்ராசெனகா நிறுவனம், பிரித்தானியாவுக்கு தடுப்பூசி விநியோகிக்கவேண்டியிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கொடுக்கவேண்டிய தடுப்பூசி டோஸ்களின் அளவைக் குறைக்கவேண்டியுள்ளது என்று கூறியிருந்தது.
இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கத்திலிருந்து எதிர்ப்பு உருவானது. ஆஸ்ட்ராசெனகா நிறுவனம், தான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துள்ள ஒரு ஒப்பந்தத்தில், பிரித்தானியாவுக்குத்தான் தடுப்பூசியில் முன்னுரிமை என ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
ஆனால், எங்கள் நாட்டில் தயாரிக்கும் தடுப்பூசி எங்களுக்கு கிடைக்காமல் எப்படி பிரித்தானியாவுக்கு மட்டும் கொடுக்கப்பாடலாம் என வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டனர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள். நாங்கள் நினைத்தால் மொத்த தடுப்பூசி ஏற்றுமதியையும் தடுத்துவிடுவோம் என தாதா போல மிரட்டல் விடுத்தார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா.
அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலாவும் அடக்கம்! ஆனால், இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஏற்கனவே பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில், பாதியைத்தான் அவர்கள் மக்களுக்கு செலுத்தியிருக்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக்கொண்டிருப்பதால், பிரித்தானியா மீதான பொறாமையால் வீம்புக்கென்றே அவர்கள் அப்படி மிரட்டுவதாக தெரிகிறது. நேற்று, பிரித்தானியாவுக்கு அனுப்புவதற்காக பல மில்லியன் டோஸ்கள் தடுப்பூசியை தயாரிப்பதாக தவறாக சந்தேகப்பட்ட இத்தாலி அதிகாரிகள், திடீரென அதிரடியாக ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி தயாரிக்கும் மையம் ஒன்றிற்குள் நுழைந்தார்கள்
ஆனால், அங்கு தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த 29 மில்லியன் டோஸ் தடுப்பூசியும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மூன்றாவது உலக நாடுகளுக்குத்தான், பிரித்தானியாவுக்கு அல்ல என்பது தெரியவரவே, வெட்கத்துடன் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரும்பியுள்ளார்கள் ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகள்!
ஒரு பக்கம் பிரான்சும் ஜேர்மனியும் ஐரோப்பிய ஆணையத்தின் மிரட்டலுக்கு ஆதரவு தெரிவித்தாலும், இன்னொரு பக்கம், அயர்லாந்து இது கீழ்த்தரமான நடவடிக்கை என்று ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சித்துள்ளது. அதனுடன் இணைந்து பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஆணையத்தின் நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளன.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன், உயிர்காக்கும் தடுப்பூசி விநியோகத்தை தடுப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் நற்பெயருக்கு நீண்ட கால அவப்பெயர் ஏற்படும் என்றும், சர்வதேச நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலீடு செய்வது தடைபடும் என்றும் எச்சரித்தார்.
முன்னாள் பிரித்தானிய சுகாதார செயலரான Jeremy Huntம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசி ஏற்றுமதி தடை திட்டம் முட்டாள்தனமானது என்றும், அதனால் நெருங்கிய நட்பு நாடான பிரித்தானியாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவில் பல ஆண்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் சற்று கீழிறங்கி வந்துள்ளது. பிரித்தானியா எச்சரிக்க, சக உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க மறுக்க, வேறு வழியில்லாமல், எல்லோருக்கும் நன்மை உண்டாகும் வகையில் தடுப்பூசி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என பிரித்தானியாவுடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட சம்மதித்துள்ளது ஐரோப்பிய ஆணையம்.


