அஸ்ட்ராஜெனேகா குறித்து வெளியான தீர்ப்பு; தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புதல்
முன்னணி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை மீண்டும் பயன்படுத்த தொடங்குவதாக வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளன.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்களுக்கு இரத்தம் உறைதல் அபாயம் இருப்பதாக சமீப நாட்களாக தகவல் பரவியது. இதனால், பல முன்னணி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அடுத்தடுத்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன.
இதனால் ஐரோப்பாவில் தடுப்பூசி விநியோகம் திடீரென தடைபட்டது. அதன் விளைவாக தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. பல நாட்களாக இந்த சர்ச்சை நீடிக்கவே, ஐரோப்பிய மருத்துவ கட்டுப்பாட்டாளரான European Medical Agency இந்த பிரச்சினையில் தலையிட்டு தடுப்பூசி குறித்து விசாரணை மேற்கொண்டது.
ஏற்கெனெவே, WHO மற்றும் பிரித்தானியாவின் சுகாதார கண்காணிப்புக் குழுவும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பாதுகாப்பானது என்று கூறியிருந்ததை அடுத்து, இப்போது ஐரோப்பிய மருந்துகள் முகமை (EMA) இந்த தடுப்பூசி "பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது" என தீர்ப்பை வெளியிட்டது.
EMA-ன் அறிவிப்புக்குப் பிறகு, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், லிதுவேனியா, லாட்வியா, ஸ்லோவேனியா மற்றும் பல்கேரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை விரைவில் மக்களுக்கு வழங்க தொடங்குவதாகக் கூறியது.
இருப்பினும் நார்வே மற்றும் சுவீடன் தடுப்பூசியைப் பயன்படுத்தி மீண்டும் தொடங்கத் தயாராக இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.