ரஷ்யாவில் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களுக்குத் தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய நாடுகளில் சேவையை முன்னெடுக்கும் விமான நிறுவனங்கள் ரஷ்யாவிலும் உள்ளூர் சேவையை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுமினியம் இறக்குமதி
ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 16வது முறையாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளது.
அதில் ரஷ்யாவில் இருந்து இனி ஐரோப்பிய நாடுகள் அலுமினியம் இறக்குமதியை முன்னெடுப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கேமிங் கன்சோல்களின் விற்பனை, கிரிப்டோகரன்சி நிறுவனம் ஒன்றையும் தடை விதித்துள்ளது.
மேலும் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படும் டசின் கணக்கான கப்பல்கள் மீதும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
உள்ளூர் விமான சேவை
இதனிடையே மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் விமான சேவைகளின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதமாக, ரஷ்ய விமான நிலையங்களுக்கு இடையே உள்நாட்டு விமானங்களை இயக்க மற்ற நாடுகளைச் சேர்ந்த விமானங்களை அனுமதிப்பது குறித்து ரஷ்ய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் உள்ளூர் விமான சேவையை முன்னெடுக்கும் எனில், அல்லது ரஷ்ய விமான சேவைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கினால் அந்த விமான சேவை நிறுவனங்கள் ஐரோப்பாவில் சேவையை முன்னெடுக்க தடை விதிக்கப்படுவதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபரில் ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட், கஜகஸ்தான் உட்பட சில மத்திய ஆசிய நாடுகளுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியிருந்தார். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு தொடர்பில் ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |