பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் ராஜினாமா... ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒத்திவைப்பு
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்துள்ள விடயம், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமோ என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
காரணம், பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து நடத்தும் உச்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒத்திவைப்பு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய விடயம், பிரித்தானியாவுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

ஆனால், கெய்ர் ஸ்டார்மர் பிரதமரானதிலிருந்து, அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறார்.
அதனால், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையக்கூடும் என்ற எண்ணம் கூட பலருக்கு உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், வெண்ணெய் திரண்டுவரும்போது பானை உடைந்த கதையாக, ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை திடீரென ராஜினாமா செய்யும் நிலை உருவாகிவிட்டது.
ஸ்டார்மரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஒன்றிய - பிரித்தானிய உச்சி மாநாட்டை ஒத்திவைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பலர் ஸ்டார்மருக்கு புகழஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
ஸ்டார்மரின் ராஜினாமா செய்தி வெளியான சிறிது நேரத்தில் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்ட ஐரோப்பிய ஆணையத் தலைவரான உர்சுலா வோன் டெர் லேயன், அன்புள்ள கெய்ர் அவர்களே, வெறும் இரண்டு ஆண்டுகளில் நீங்கள் ஒரு ராஜதந்திரியாக ஆகிவிட்டீர்கள். உங்கள் நிலையை அடைய, பல தலைவர்களுக்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடும். உங்களால் ஐரோப்பிய மற்றும் உக்ரேனியப் பாதுகாப்பு வலுப்பெற்றுள்ளது, நன்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரைப்போலவே, ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய தலைமை செய்தித்தொடர்பாளர் என பல தலைவர்களும் ஸ்டார்மருக்கு புகழஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |