தாலிபான்களுடன் இணைந்து செயல்பட தயார்: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் மதிக்கப்பட்டால் தாலிபான்களுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் அமைதி நிலவுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தாலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid) நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகம் எங்களை நம்பவேண்டும் என்று விரும்புகிறோம். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மேலும் சண்டையிட விரும்பவில்லை, ஆப்கானிஸ்தான் மண் உலகின் எந்த நாட்டிற்கும் எதிராக பயன்படுத்தப்படாது" என்றார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர் ஜோசப் பொரல் (Josep Borrell) தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோசப் பொரல், ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் மதிக்கப்பட்டால் தாலிபான்களுடன் இணைந்து செயல்பட தயார்.
அதற்காக தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிப்பதாக நான் கூறவில்லை. பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பது உள்பட அனைத்திற்கும் நாம் அவர்களிடம் பேசவேண்டியுள்ளது என நான் கூறுகிறேன்’ என்றார்.