ஐரோப்பா மொத்தம் கடும் குளிரால் உறைந்து போகும்... ரஷ்யா வெளியிட்ட கிண்டல் காணொளி
பயன்பாட்டுக்கு எரிவாயு இல்லாமல், ஐரோப்பா முழுவதும் குளிரால் உறைந்து போவதாக...
தொடர் மின் தடைகள் ஏற்படலாம் எனவும் தொழிற்சாலைகள் முடங்கிப் போகும், பொருளாதார மந்த நிலை
ஐரோப்பாவுக்கான எரிவாயு வழங்கலை மொத்தமாக நிறுத்தியுள்ள ரஷ்யா, தற்போது கிண்டலடிக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டு கொடூர முகத்தை காட்டியுள்ளது.
ரஷ்ய அரசு நிறுவனமான Gazprom வெளியிட்ட அந்த காணொளியில், ஊழியர் ஒருவர் ஐரோப்பாவுக்கான மொத்த எரிவாயு வழங்கலையும் ஒரு பொத்தானை திருகி நிறுத்துகிறார்.
இதனால், பயன்பாட்டுக்கு எரிவாயு இல்லாமல், ஐரோப்பா முழுவதும் குளிரால் உறைந்து போவதாக அந்த காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குளிர் காலம் மிக நீளமானது என பெயரிடப்பட்டுள்ள குறித்த காணொளியில் லண்டன், பெர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்கள் பனியால் மூடப்பட்டுள்ளதாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ரஷ்ய படையெடுப்பை அடுத்து ஜேர்மனியால் தடை விதிக்கப்பட்ட, இதுவரை செயற்படாத Nord Stream 2 திட்டம் தொடர்பான காட்சிகளும் அந்த காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எரிசக்தி பற்றாக்குறை விவகாரத்தை எதிர்கொள்ள முடியாமல் ஐரோப்பா திணறுவதாகவும், இதனால் தொடர் மின் தடைகள் ஏற்படலாம் எனவும் தொழிற்சாலைகள் முடங்கிப் போகும் எனவும், பொருளாதார மந்த நிலை மொத்தமாக சுழன்றடிக்கும் எனவும் அந்த காணொளியால் ரஷ்யா கூறியுள்ளது.
தொழிற்சாலைகளை நடத்துவதற்கும், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும், குடியிருப்புகளை கதகதப்பாக்குவதற்கும் ஐரோப்பா கண்டம் பல ஆண்டுகளாக நம்பியிருந்த மலிவான இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முடக்கியது.
மேலும், எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது என Nord Stream 1 திட்டம் ஊடாக ஜேர்மனிக்கு அளிக்கப்பட்டு வந்த எரிவாயுவையும் Gazprom முடக்கியது. மட்டுமின்றி, தங்கள் மீதான தடைகள் காரணமாக பராமரிப்பு பணிகளை துரிதமாகவும் முழுமையாகவும் முன்னெடுக்க முடியவில்லை என ரஷ்யா கூறி வருகிறது.
ஆனால், இது அப்பட்டமான மிரட்டல் எனவும், உக்ரைனை ஆதரப்பிதால் ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா பழி வாங்குகிறது எனவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கூறுகின்றனர்.