ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை- 10,000 பேர் உயிரிழப்பு
ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
EuroMOMO என்ற அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, இதில் பெரும்பாலானோர் (9,000-க்கும் மேற்பட்டோர்) 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆவர்.
இந்த வெப்ப அலை பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெப்பம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன, மின்சாரம் பாதிக்கப்பட்டது, மேலும் பல இடங்களில் பல இடங்களில் வெப்ப சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

டென்மார்க் நாட்டின் Statens Serum Institut மருத்துவ நிபுணர் லாஸ்ஸே வெஸ்டர்கார்ட், “இந்த அளவுக்கு அதிகமான உயிரிழப்பு இந்த காலகட்டத்தில் அரிதானது. இதற்கு காரணம் கடும் வெப்பமே” என்று தெரிவித்துள்ளார்.
அறிவியலாளர்கள், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றம் இல்லாமல் இவ்வாறான வெப்ப அலை நிகழ்வது “மிகவும் சாத்தியமற்றது” என கூறியுள்ளனர்.
உலக வெப்பமயமாதல் காரணமாக வெப்ப அலைகள் அடிக்கடி, மேலும் தீவிரமாக நிகழ்கின்றன. பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் மிக அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக பெல்ஜியத்தில், 2000-ஆம் ஆண்டிலிருந்து பதிவாகியுள்ள வெப்ப அலைகளில் இதுவே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் மட்டும் 2,700 பேர் வெப்பத்தால் உயிரிழந்ததாக தனி ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 42 சதவீத உயிரிழப்புகள் உலக வெப்பமயமாதலால் அதிகரித்த வெப்பத்தால் ஏற்பட்டவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த தரவுகள், காலநிலை மாற்றம் மனித வாழ்வில் ஏற்படுத்தும் ஆபத்துகளை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |