ஜூன் முதல் Schengen Visa கட்டணம் உயர்வு
ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு இனி பயணச் செலவு அதிக சுமையாக இருக்கப்போகிறது.
இதற்குக் காரணம் ஷெங்கன் விசா (Schengen Visa) கட்டணத்தை அதிகரிப்பதே ஆகும்.
உலகளவில் ஷெங்கன் விசா கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்தும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்லோவேனியாவின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சகம் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியது.
இந்த உயர்வு ஜூன் 11 முதல் உலகம் முழுவதும் அமுலுக்கு வருகிறது.
இதுவரை வயது வந்தோருக்கான ஷெங்கன் விசா விண்ணப்பக் கட்டணம் 80 யூரோவாக இருந்தது, தற்போது அது 90 யூரோக்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விசா கட்டணம் 40ல் இருந்து 45 யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வு காரணமாக விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் இந்த முடிவு இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏனெனில் ஐரோப்பாவுக்கான விசா விண்ணப்பங்களில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், சமீபத்திய கட்டண உயர்வின் தாக்கம் இந்தியர்களுக்கு அதிகமாக இருக்கும்.
கடைசியாக இந்த விசா விலைகள் பிப்ரவரி 2020-இல் அதிகரிக்கப்பட்டன. பின்னர் 60 யூரோவாக இருந்த விண்ணப்பக் கட்டணம் 80 யூரோவாக மாற்றப்பட்டது.
Schengen என்றால் என்ன?
Schengen என்பது 29 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 90 நாட்கள் வரை அந்தந்த நாடுகளுக்குச் செல்ல Schengen Visa-க்கள் வழங்கப்படுகின்றன.
29 நாடுகளில், எந்த நாடு இந்த விசாவை வழங்கினாலும், மற்ற 28 நாடுகளுக்கும் செல்ல முடியும்.
இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, பின்லாந்து, ஜேர்மனி, ஹங்கேரி, கிரீஸ், ஐஸ்லாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்வீடன், ஸ்பெயின் மற்றும் பிற நாடுகள் இந்த வகைக்குள் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Schengen Visa, Schengen tourist Visa, Schengen Countries, Schengen visa fee hike