விமான எரிபொருள் பற்றாக்குறையைச் சந்திக்கவிருக்கும் ஐரோப்பிய விமான நிலையங்கள்
ஐரோப்பிய விமான நிலையங்கள் விமான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன என சர்வதேச ஐரோப்பிய விமான நிலையங்கள் கவுன்சில் எச்சரித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை
மூன்று வாரங்களுக்குள் ஹார்முஸ் நீரிணை முழுமையாக மீண்டும் கப்பல் போக்குவரத்திற்கு திறக்கப்படாவிட்டால், ஐரோப்பிய விமான நிலையங்கள் விமான எரிபொருள் பற்றாக்குறையைச் சந்திக்கும் என்று சர்வதேச ஐரோப்பிய விமான நிலைய கவுன்சில் எச்சரித்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையில் இனி எதிரிகளின் கப்பல் போக்குவரத்து முடக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
சுமார் 20 கப்பல்கள் ஈரான் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது. இதனையடுத்து, ஹார்முஸ் நீரிணையில் மொத்த கப்பல் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
நாள் ஒன்றிற்கு சுமார் 135 கப்பல்கள் வரையில் ஹார்முஸ் நீரிணையைக் கடந்த நிலையில், போர் நடந்த அந்த 6 வாரங்களும் நாள் ஒன்றிற்கு 5 முதல் 10 கப்பல்கள் வரையே கடந்துள்ளன.
அதுவும், ஈரானுக்கு சொந்தமான கப்பல்கள் மட்டும் தொடக்கத்தில் கடந்தன. பின்னர் சீனா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் ஈரானின் அனுமதியுடன் கடந்தன. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னரும், வெறும் 10 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல காரணங்களால் தயக்கம்
ஏற்கனவே எரிபொருள் தேவை பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ள நிலையில், கப்பல் போக்குவரத்து மீண்டும் முன்னெடுப்பதில், கப்பல் நிறுவனங்கள் பல காரணங்களால் தயக்கம் காட்டி வருவதாகவே கூறப்படுகிறது.

இதனிடையே, லெபனான் மீதான இஸ்ரேலின் மிருகத்தனமானத் தாக்குதலையடுத்து ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமைதிப்பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் உலகின் பல நாடுகள் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |