புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்: எதிர்காலமே கேள்விக்குறியா?
புலம்பெயர்தலையே கேள்விக்குறியாக்கும் வகையிலான நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் சில துவங்கியுள்ளன.
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கைகள்
உலகத்தில், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் இயற்கைப் பேரழிவுகள் முதல், எப்போது மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என அச்சப்படவைத்துள்ள நாடுகளுக்கிடையிலான மோதல்கள் வரை, ஆயிரம் பிரச்சினைகள் நிலவுகின்றன.
ஆனால், பல நாடுகள் அவற்றையெல்லாம் விட்டு விட்டு, புலம்பெயர்தலையே முக்கிய பிரச்சினையாக கருதி அதற்கெதிராக நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளன.
Credit: Getty
பிரித்தானியா, முதலில் சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகளை துவக்கியது. பின்னர் ரிஷி சுனக் தலைமையிலான அரசு சட்டப்படி புலம்பெயர்பவர்களையே கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது.
கனடா புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், சர்வதேச மாணவர்களுக்கு எதிராகவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகம் அறிந்ததே.
அமெரிக்காவோ, புலம்பெயர்ந்தோரைத் தடுப்பதற்காக எல்லையில் தடுப்புச் சுவரே எழுப்பியது.
ஒன்றிணைந்துள்ள ஐரோப்பிய நாடுகள்
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் புலம்பெயர்தலுக்கெதிராக கைகோர்த்துள்ளன.
புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தும் முன் தற்காலிகமாக தங்கவைப்பதற்காக, ’நாடுகடத்தல் மையங்களை’ ஐரோப்பாவுக்கு வெளியே உருவாக்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Ursula von der Leyen, இந்த விடயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
சமீபத்தில், இத்தாலி, புலம்பெயர்ந்தோர் சிலரை அல்பேனியா நாட்டுக்கு நாடுகடத்தியுள்ள நிலையில், மற்ற ஐரோப்பிய நாடுகள் இத்தாலியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத 484,000 புலம்பெயர்ந்தோர் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட நிலையில், அவர்களில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே சொந்த நாடுகளுக்குத் திரும்பியதாக தெரிவிக்கிறார் Ursula.
அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஐரோப்பிய ஆணையம் இறங்கியுள்ளதாக தெரிவிக்கும் அவர், அதற்காக விரைவில் சட்டம் ஒன்றை முன்வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பறவைகளின் புலம்பெயர்தலைப்போல, மனிதர்களின் புலம்பெயர்தலும் அத்தியாவசியமானதாகும். இன்னமும் பல நாடுகளில் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.
உதாரணமாக, கிழக்கு ஜேர்மனியில் மருத்துவத்துறையில் தட்டுப்பாடு காணப்படுகிறது, தற்போது அங்கு மருத்துவத்துறையில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தோர்தான்.
ஆனால், அங்கு பிரபலமாகிவரும் வலதுசாரிக் கட்சிகள் புலம்பெயர்ந்தோர் வேண்டாம் என்கிறார்கள். அப்படியானால், மருத்துவம் பார்க்க அவர்கள் யாரிடம் போவார்கள்.
கனடா, பிரித்தானியா முதலான சில நாடுகள் சர்வதேச மாணவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதித்தன. ஆகவே, பல மாணவர்கள் கட்டுப்பாடுகள் குறைவான நாடுகள் பக்கம் திரும்பிவிட்டார்கள்.
இப்போது கல்லூரிகளை நடத்த பணம் இல்லை என்கின்றன பல்கலை யூனியன்கள்.
ஆனாலும், புலம்பெயர்தலுக்கெதிராக நடவடிக்கை எடுத்தே தீருவோம் என ஒற்றைக்காலில் நிற்கும் நாடுகளுடன் ஐரோப்பாவும் கைகோர்க்கிறது.
என் நாடு எனக்கு மட்டுமே, இங்கே யாரும் வராதீர்கள் என ட்ரம்பைப்போல எல்லா நாடுகளின் தலைவர்களும் சொல்லத் தொடங்கினால், உலகம் என்னும் சமுதாயத்தின் நிலை என்ன ஆகும்? காலம்தான் இவர்களுக்கு பதில் சொல்லவேண்டும், சொல்லும்!