ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள்
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரியை திணித்துள்ள நிலையில், தற்போது ஐரோப்பிய நாடுகளும் நடவடிக்கை எடுக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்
ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
NBC செய்தி நிறுவனத்துடன் நேர்காணல் ஒன்றில் பேசிய அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது போன்று ஐரோப்பிய ஒன்றியமும் செயல்பட வேண்டும் என்றார்.
அப்படியான நடவடிக்கைகளால் மட்டுமே ரஷ்ய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முடியும் என்றார். அப்படி இல்லை என்றால், உக்ரைன் போர் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அமைதி ஒப்பந்தத்திற்கு விளாடிமிர் புடினை கட்டாயப்படுத்த முடியாமல் போகும் என்றும் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, உக்ரைன் விவகாரத்தில் ஒரு முடிவை எட்ட முடியும் என்றும், இதனால் ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது கூடுதல் இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்றார்.
இரண்டாவது பெரிய நாடு இந்தியா
ஆனால், இந்தியா அல்லது வேறு எந்த நாட்டையும் ஸ்காட் பெசென்ட் குறிப்பிடவில்லை என்றாலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதிப்பது குறித்த அவரது கருத்து, இந்தியாவை மறைமுகமாக குறிவைப்பதாகும்.
சீனாவிற்குப் பிறகு ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்பதாலும், சீனா மீது ரஷ்ய எண்ணெய் தொடர்பில் நடவடிக்கை எடுக்க ட்ரம்ப் தயங்குவதாலும், ஸ்காட் பெசென்ட் குறிப்பிடும் நாடு இந்தியா என்றே உறுதியாகிறது.
மட்டுமின்றி, ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்க நிர்வாகத்தின் முதன்மையான அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனிடம் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |