ஈரான் அரசாங்கத்தை... நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் உலக நாடுகளுக்கு கோரிக்கை
ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்க போராட்டக்காரர்களுக்கு உதவுமாறு கடைசி ஈரானிய மன்னரின் நாடுகடத்தப்பட்ட மகன் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
இஸ்லாமியக் குடியரசு வீழ்ச்சியடையும் என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அது எப்போது நடக்கும் என்பதுதான் கேள்வி, நடக்குமா இல்லையா என்பதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் குடியிருக்கும் ரெசா பஹ்லவி, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தலைமைத்துவத்தை இலக்கு வைக்குமாறு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார். இது எங்கள் பணியை எளிதாக்கும் மற்றும் மேலும் உயிர் இழப்புகளைத் தடுக்கும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், டிசம்பர் 28 அன்று பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகத் தொடங்கி, பின்னர் ஈரானின் உயர் தலைவர் அலி ஹொசைனி கமெனியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கோரிக்கைகளாக மாறிய போராட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை என்றே பின்னர் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களை முன்னெடுத்த மக்களை கலவரக்காரர்கள் என குறிப்பிட்ட ஈரானிய அரசாங்கம், எதிரிகளின் சூழ்ச்சியால் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
பட்டத்து இளவரசரான பஹ்லவி ஈரானின் சிதறியுள்ள எதிர்க்கட்சியில் ஒரு முக்கிய நபராக உருவெடுத்துள்ளார், மேலும் அவர் இதற்கு முன்பு ஈரானியர்களைத் தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், இணையம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் ஏறக்குறைய முழுமையாக முடக்கப்பட்டதன் மறைவில், போராட்டக்காரர்கள் அதிகாரிகள் தரப்பிலிருந்து கொடிய வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ஈரானின் பாதுகாப்பு அமைப்பின் சில பிரிவுகள் இந்த அடக்குமுறையில் பங்கேற்க மறுத்துவிட்டதாகவும், போராட்டங்களை அடக்குவதற்காக ஈரானிய அதிகாரிகள் வெளிநாட்டுப் போராளிக் குழுக்களிடமிருந்து ஆட்களைக் கொண்டு வந்ததாகவும் பஹ்லவி தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை மற்றும் அதன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்குமாறு அவர் உலக நாடுகளை வலியுறுத்தினார், அத்துடன் ஒரு துல்லியமான தாக்குதலுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
உலக வல்லரசுகள் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தைக் கொடுக்கவும், ஈரானிய தூதர்களை வெளியேற்றவும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரவும், ஈரானில் இணையத் தொடர்பை ஏற்படுத்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் மற்றும் பிற பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகளைப் பயன்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.

ட்ரம்பை நம்புவதாக
ஈரானிய மக்கள் களத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது சர்வதேச சமூகம் அவர்களுக்கு முழுமையாக உதவும் நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளின் உதவியுடன் அல்லது இல்லாமல் இந்த அரசாங்கம் கவிழ்வது உறுதி என குறிப்பிட்டுள்ள பஹ்லவி, உலக நாடுகள் உதவினால், இந்த அரசாங்கம் விரைவில் வீழ்ச்சியடையும் மற்றும் அதிக உயிர்கள் காப்பாற்றப்படும் என்றார்.
தாம் ஜனாதிபதி ட்ரம்பை நம்புவதாகவும், இறுதியில், அவர் ஈரானிய மக்களுடன் நிற்பார் என்பது உறுதி எனவும் பஹ்லவி குறிப்பிட்டுள்லார். ஆனால், ஈரான் அரசாங்கம் மீது கடும் மிரட்டல் விடுத்து வந்த ட்ரம்ப், கைதான போராட்டக்காரர்களை அரசாங்கம் தண்டிக்காது என ஈரான் நிர்வாகம் உறுதி அளித்ததன் பின்னர், இராணுவ நடவடிக்கைகளை தற்போது கைவிடுவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தால், இஸ்ரேலும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ மற்றும் கப்பல் போக்குவரத்து மையங்களும் சட்டப்பூர்வ இலக்குகளாக மாறும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்திருந்தார்.
இதனையடுத்து வெளியான தகவலில், கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமான தளத்தில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான (HRANA) தகவலின்படி, போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 2,595 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 17 சிறார்களும், 164 பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பும் அடங்குவர் என தெரிவித்துள்ளது. கைதானவர்கள் எண்ணிக்கை 22,104 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |