Facebook காதல்! அமெரிக்க பெண்ணிடம் ரூ.5 லட்சம் பணத்தை இழந்த இந்திய மாணவர் விபரீத முடிவு
கர்நாடகா மாநிலம், பெங்களூரூவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்க பெண்ணிடம் ரூ.5 லட்சம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் காதல்
கர்நாடகா, மண்டியா மாவட்டம், பாண்டவபுரா டவுன் பகுதியை சேர்ந்த சண்முக் (20) என்ற மாணவர் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு முகநூல் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண் தான் அமெரிக்காவில் வசித்து வருவதாக கூறி பேசி வந்துள்ளார். பின்னர், நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, இருவரும் அடிக்கடி பேஸ்புக் மூலம் பேசிக் கொண்டனர். இதனிடையே, அந்த பெண் அவசரமாக தனக்கு பணம் வேண்டும் என்று சண்முக்கிடம் கேட்டுள்ளார்.
உடனே, சண்முக் தனது தாயின் நகைகளை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார். இப்படி, அந்த பெண் சண்முக்கிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.
இளைஞர் தற்கொலை:
இந்த விவகாரம், சண்முக்கின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அவரை கண்டித்துள்ளனர். இதனால், சண்முக் அந்த பெண்ணிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் பணத்தை திரும்ப கொடுக்காமல் அவரிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார்.
இதனால், மனமுடைந்த விரக்தியில் நேற்று முன்தினம் சண்முக் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலிருந்த பொலிசார் பாண்டவபுரா பகுதிக்கு வந்து சண்முக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், விசாரணையின் போது பேஸ்புக் மூலம் காதலிப்பதாக கூறி அமெரிக்க பெண் பணம் வாங்கி மோசடி செய்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |