Fact Check: பிரான்ஸ் கலவரங்களின்போது வனவிலங்குகள் அவிழ்த்துவிடப்பட்டதாகக் கூறும் வீடியோ...
பிரான்ஸ் கலவரம் தொடர்பாக பல்வேறு போலி வீடியோக்கள் இணையத்தில் உலாவருகின்றன. சில, வைரலும் ஆகின்றன.
அவ்வகையில், பிரான்ஸ் கலவரங்களின்போது பாரீஸ் உயிரியல் பூங்காவிலிருந்து சில விலங்குகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது?
அந்த வீடியோவில், இரவு நேரத்தில், மூன்று சிங்கங்கள், வரிக்குதிரை ஒன்று மற்றும் ஒரு குதிரை ஆகியவை சாலையில் உலாவருவதைக் காணமுடிகிறது.
உண்மை என்ன?
உண்மையில் இந்த சம்பவம் பிரான்சில் நடந்ததுதான். ஆனால், அவை பாரீஸில் உள்ள உயிரியல் பூங்காவிலிருந்து விடுவிக்கப்பட்ட விலங்குகள் அல்ல.
அந்த சம்பவம், பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவின் தலைநகரான Saint-Denis என்னுமிடத்தில் நிகழ்ந்தது. அந்த வீடியோவிலேயே அந்த பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.
மேலும், 2020ஆம் ஆண்டு 11ஆம் திகதி ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இடுகைகளிலும், 12ஆம் திகதி, யூடியூபிலும் இதே வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது
அவை அனைத்துமே, இந்த சம்பவம் Saint-Denis என்னுமிடத்தில் நிகழ்ந்ததாகத்தான் குறிப்பிடுகின்றன.
அத்துடன், ஜூலை 3ஆம் திகதி, பாரீஸ் உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், ஹலோ, யாரும் கவலைப்படவேண்டாம், இங்கு எல்லா விலங்குகளும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, பிரான்ஸ் கலவரங்களின்போது பாரீஸ் உயிரியல் பூங்காவிலிருந்து சில விலங்குகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறும் செய்தி போலியானது என்பது உறுதியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |