நிலநடுக்கத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்... காப்பகத்தில் நேர்ந்த கொடூர சம்பவம்
துருக்கியை மொத்தமாக உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய சிரியா குடும்பம் ஒன்று, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 பேர்கள் கொண்ட சிரியா குடும்பம்
துருக்கி மற்றும் சிரியாவின் முக்கிய பகுதிகளை உருக்குலைத்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 41,000 மக்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆயிரம் மக்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
@AFP
இந்த நிலையில் 5 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர்கள் கொண்ட சிரியா குடும்பம் ஒன்று நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியதுடன், துருக்கி அரசாங்கத்தின் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தான், அந்த குடும்பம் தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக உள்ளூர் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட ஐந்து சிறார்களும் 4 முதல் 14 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள், தங்களால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போனது என கண்கலங்கியுள்ளனர். இருப்பினும், சிறுமி ஒருவரை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
துருக்கியின் 11 பிராந்தியங்கள்
பிப்ரவரி 6ம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது துருக்கியின் 11 பிராந்தியங்களை மொத்தமாக உருக்குலைத்துள்ளது. இதன் பின்னர் 5,000 நில அதிர்வுகளும் இப்பகுதிகளில் பதிவாகியுள்ளது.
@getty
மட்டுமின்றி, இப்பகுதியானது சுமார் 1.74 மில்லியன் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்திருந்தது. சுமார் 4 மில்லியன் சிரியா அகதிகள் துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தில் சிக்கிய சிரியா மக்களின் 1,528 பேர்களின் சடலம் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், துருக்கியில் இதுவரை 38,044 பேர்களும் சிரியாவில் 3,688 பேர்களும் மொத்தம் 41,732 பேர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.