கனடா - அமெரிக்க எல்லையில் உடல் உறைந்து மிக மோசமான நிலையில் மீட்கப்பட்ட ஒரு குடும்பம்
கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து இரண்டு பிள்ளைகள் உட்பட ஒரு குடும்பம் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
மிக மோசமான நிலையில்
கனடா - அமெரிக்க எல்லையில் உள்ள கியூபெக் பகுதியில் இருந்தே அவர்கள் மிக மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
RCM பொலிசார் தெரிவிக்கையில் உள்ளூர் நேரப்படி விடிகாலை 3.15 மணியளவில் கியூபெக் மாகாண பொலிசாரிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும், பிஞ்சு குழந்தைகள் இருவர் உட்பட ஒரு தம்பதி மிக மோசமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என்றும் கோரியதாக தெரிவித்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவின் போது பல மணி நேரம் நடந்து, வனப்பகுதியில் அவர்கள் பாதையை தொலைத்துள்ளதாக நம்பப்படுகிறது. மட்டுமின்றி, அந்த தாயாரிடம் இருந்து 911 இலக்கத்திற்கு அழைப்பு சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அவசர உதவிக் குழுவினர் அந்த குடும்பத்தினரை கண்டுபிடிக்க GPS உதவியை நாடியுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியுள்ள அவர்களை 4.15 மணியளவில் அதிகாரிகள் தரப்பு கண்டுபிடித்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், அந்த குடும்பமானது ஒரு மரத்தின் அடியில் காணப்பட்டனர். பெற்றோர் தங்கள் காலணிகளை ஆற்றில் தொலைத்துவிட்டனர், மேலும் குழந்தைகள் இருவரும் கடும் குளிருக்கு ஏற்றவாறு உரிய உடை அணிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அகதிகள் நிலைக்கு
தம்பதியின் வயது உறுதி செய்யப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகள் இருவரையும் அணைத்துக் கொண்ட நிலையில் சுருண்டு விழுந்துள்ளனர்.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக அவர்களால் முன்னேறிச் செல்ல முடியாமல் போயுள்ளது. அந்த தாயார் காட்டில் இருந்து பனியில் சறுக்கி ஓடும் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டார், இரண்டு குழந்தைகளும் அதிகாரிகளால் சுமந்து செல்லப்பட்டனர்.
அவர்கள் நால்வரையும் கியூபெக்கில் உள்ள Châteauguay பகுதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த குடும்பம் அகதிகள் நிலைக்கு அரசாங்கத்திடம் முறையிடலாம் என்றே கூறப்படுகிறது. அவர்கள் எந்த நாட்டினர் உள்ளிட்ட தகவல் ஏதும் கியூபெக் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |