அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை, 20 வயது மகள் உயிரிழப்பு
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை மற்றும் அவரது 24 வயது மகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள அக்கோமாக் கவுண்டியில் மார்ச் 20 ஆம் திகதி காலை 5:30 மணிக்கு லான்க்போர்டு நெடுஞ்சாலையில் உள்ள கடையில் பிரதீப் குமார் படேல் என்பவர் அவரது மகளுடன் பணிபுரிந்து கொண்டு இருந்த போது மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், அங்கு பிரதீப்குமார் படேல் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். கடையில் மேலும் விசாரணை நடத்தியதில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருப்பதை கண்டறிந்தனர்.
அவர் உடனடியாக சென்டாரா நோர்போக் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.
இந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் மர்மமாக உள்ளது. பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை குற்றவாளி கைது
இந்த அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய 44 வயது ஜார்ஜ் பிரேசியர் டெவோன் வார்டன் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் தற்போது அக்கோமாக் சிறையில் பிணை இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது முதல் நிலை கொலை, கொலை முயற்சி, குற்றவாளியாக சட்டவிரோத துப்பாக்கி வைத்திருத்தல், மற்றும் குற்றத்தின் போது துப்பாக்கி பயன்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உறவினரின் கண்ணீர்
கடையின் உரிமையாளரும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினருமான பரேஷ் படேல், WAVY-TV செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், மர்ம நபரின் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது "என் உறவினரின் மனைவியும், அவளுடைய அப்பாவும் இன்று காலை வேலை செய்து கொண்டிருந்தார்கள்" என அதிர்ச்சியுடனும் மனவேதனையுடனும் தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான செய்தி உள்ளூர் சமூகத்தை மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |