மகனை கொலை செய்ததாக தன் மாமனார் மீது தந்தை தொடர்ந்த வழக்கு: திடீரென்று உயிருடன் நீதிமன்றம் வந்ததால் பரபரப்பு
தன் மகனை, தன் மாமனாரும் அவரது மகன்களும் கொன்றுவிட்டதாக தந்தை தொடர்ந்த வழக்கொன்று நடைபெற்றுவரும் நிலையில், கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன் திடீரென உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாமனார் மீது வழக்கு
உத்தரப்பிரதேசத்திலுள்ள Pilibhit என்னும் இடத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மகனை, தன் மாமனாரும் அவரது மகன்களும் கொலை செய்துவிட்டதாக பொலிசில் புகார் செய்துள்ளார். அவரது மாமனார் மற்றும் அவரது மகன்கள் மீது எஃப் ஐ ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த எஃப் ஐ ஆரை ரத்து செய்யக்கோரி, அந்த மாமனார் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தை அணுக, உயர்நீதிமன்றம் அவர்களது மனுவை ரத்துசெய்துவிட்டது. அதைத் தொடர்ந்து, அந்த மாமனாரும் அவரது மகன்களும் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
திடீர் அதிர்ச்சி
உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. மருமகன் தரப்பில், தன் மகனை தன் மாமனாரும் அவரது மகன்களும் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்க, அது உண்மையில்லை என மாமனார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாத நிலையில், கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட 11 வயது சிறுவன் திடீரென நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டான். தான் உயிருடன் இருப்பதாகவும், தாத்தா வீட்டில் வளர்வதாகவும் சிறுவன் கூற, அனைவரும் அதிர்ச்சியடைய, வேறொரு பயங்கர உண்மை வெளிவர, வழக்கு வேறொரு பக்கம் திரும்பியது.
வெளியான உண்மை
உண்மையில் நடந்தது என்னவென்றால், தன் மாமனார் மீது வழக்குத் தொடர்ந்த அந்த நபர், தன் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். அவர் வரதட்சணை கேட்டு கண்மூடித்தனமாக தாக்கியதில், 2013ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார். அந்தப் பெண்ணின் தந்தை, தன் மகளைக் கொன்ற தன் மருமகன் மீது புகார் கொடுக்க, அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு, மனைவியைக் கொன்ற நபர் மாமனாரிடம் கேட்க, இரு தரப்பும் மாறி மாறி வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். மகன் தன்னிடம் வந்து சேராததால், அந்த நபர், தன் மாமனாரும் அவரது மகன்களும் சேர்ந்து அவனைக் கொன்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்க, அவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாமனார், அந்த எஃப் ஐ ஆரை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றம் செல்ல, உயர்நீதிமன்றம் மறுக்க, வழக்கு உச்சநீதிமன்றம் வர, இப்போது எல்லா உண்மைகளும் வெளிவந்துள்ளன.
அந்த மாமனார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், இந்த வழக்கு விசாரணை துவங்க உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |