அரைமணி நேரத்தில் ஆறு பிரியாணி! மகனுக்காக சாப்பிடும் போட்டியில் மெகா பரிசை வென்ற தந்தை
ஆட்டிசம் பாதித்த மகனின் மருத்துவ செலவிற்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட தந்தை மெகா பரிசை வென்றுள்ளார்.
பரிசை வென்ற தந்தை
கோயம்புத்தூர் ரயில்நிலையம் முன்பு ரயில் பெட்டி வடிவத்தில் ஹொட்டல் ஒன்றை கேரளாவை சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் என்பவர் நிறுவியுள்ளார்.
இவர் தனது ஹொட்டலை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டியை அறிவித்தார்.
இந்த போட்டியில் அரை மணி நேரத்தில் ஆறு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 4 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்தவகையில் கோவையைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கணேச மூர்த்தி என்பவர் கலந்து கொண்டார்.
அவர் தனது மகனின் மருத்துவ செலவிற்காக போட்டியில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "எனது மகனுக்காக இந்த போட்டியில் கலந்து கொண்டேன். 15 வயதுடைய என் மகனுக்கு ஆட்டிசம் பாதித்துள்ளது. அவனை பள்ளியில் சேர்க்க ரூ.19 ஆயிரம் தேவைப்படுகிறது.
கை கால் நன்றாக இருக்கிறது. அவனுக்கான வேலையை அவனால் செய்ய முடியாது. நானும் எனது மனைவியும் மகனை கவனித்து கொள்கிறோம்.
எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் 7 -ம் வகுப்பு படிக்கிறார். எங்கள் மகனுக்கு யாராவது உதவி செய்ய வேண்டும்'' என்று கண்ணீர் மல்க பேசினார்.
இவர் போட்டியின் முடிவில் 4 பிரியாணி சாப்பிட்டு 2ம் இடம் பிடித்ததால் ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |