அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 18 வயது இளைஞர்: சுற்றி வளைத்த FBI
அமெரிக்காவில் மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த 18 வயது இளைஞர் FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயது இளைஞர் கைது
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற மால் ஆஃப் அமெரிக்கா(Mall Of America) என்ற வணிக வளாகத்தில் மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த திட்டமிட்ட 18 வயது இளைஞரை FBI அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ISIS அமைப்பினால் ஈர்க்கப்பட்ட அவர் கடந்த மாதம் இறுதியில் இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ரகசிய நடவடிக்கையின் மூலம், ஷேக்தூன் அப்துல்லாஹி என்று அடையாளம் காணப்பட்ட நபர் FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய முகவர் ஒருவரிடம் இருந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 600 டொலர்களுக்கு AK-47 ரக துப்பாக்கி, 30 ரவுண்டுகள் கொள்ளளவு கொண்ட 4 மகசீன்கள் மற்றும் 200 துப்பாக்கிக் குண்டுகளை அவர் வாங்கியதாக புலனாய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆயுதங்களை பயன்படுத்தி அக்டோபர் மாதம் இறுதியில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் 30 முதல் 60 பேரை கொலை செய்யப்போவதாக தகவல் தருநர் ஒருவரிடம் இவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஷேக்தூன் அப்துல்லாஹி புதன்கிழமை அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி எலிசபெத் கோவன் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.