எங்கள் உயிருக்கும் ஆபத்து... ஐரோப்பிய நாடுகளில் குடியிருக்கும் பெலாரஸ் மக்கள் அச்சம்
பறக்கும் விமானத்தை வலுக்கட்டாயமாக தரையிறக்கி இளம் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களின் உயிருக்கும் பாதுகாப்பில்லை என பெலாரஸ் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு பொலிசாரின் கொடூர தாக்குதலுக்கு இலக்கானதாக தற்போது லிதுவேனியாவில் தஞ்சம் புகுந்துள்ள நபர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அத்துமீறலுக்கு எதிராக வழக்குத் தொடுக்க முன்வந்த நிலையில், தம் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் Viachka Krasulin தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தாம் ஐரோப்பிய ஒன்றிய நாடான லிதுவேனியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இளம் பத்திரிகையாளர் Raman Pratasevich கைது செய்யப்பட்ட விவகாரம் தங்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி தமது ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் எவரையும் தாம் விட்டுவிடப் போவதில்லை என ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ சூளுரைத்துள்ளார்.
ஆறாவது முறையாக ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவு செய்யப்பட, தேர்தலில் முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 35,000 பேர்களை கைது செய்த ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நிர்வாகம், ஆயிரக்கணக்கானோரை கடுமையாக தாக்கியதாகவும் தகவல் வெளியானது.
கடந்த 9 மாதங்களில் பெலாரஸ் மக்கள் 16,000 பேர் அண்டை நாடான லிதுவேனியாவில் நீண்டகால வீசா பெற்றுள்ளனர்.
இதில் 3,500 பேர்கள் அரசின் கொடுமைகளுக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.