சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கிய பிரச்சினை... இந்திய பணியாளர்களை பலிகடாவாக்க திட்டமிட்டுள்ளதால் அச்சம்
சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பல் பிரச்சினையால் ஏற்பட்ட குழப்பத்தை திசை திருப்புவதற்காக, அந்த கப்பலில் பணி செய்யும் இந்திய பணியாளர்களை பலிகடாவாக ஆக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
220,000 டன் எடையுள்ள Ever Given என்னும் சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயில் குறுக்கே சிக்கி நின்றதால், சரக்குக் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆறு நாட்கள் அந்த கப்பல் சிக்கி நின்றதால், நாளொன்றுக்கு 6.5 பில்லியன் பவுண்டுகள் வர்த்தகம் தடைபட்டு நின்றது.
இந்நிலையில், இராட்சத இயந்திரங்கள் மூலம் கப்பல் தரை தட்டியிருந்த இடத்திலிருந்த மண் அகற்றப்பட, பல சிறு படகுகள் இணைந்து கால்வாயில் குறுக்கே நின்ற அந்த கப்பலை திருப்பின.
அதைத் தொடர்ந்து Ever Given சூயஸ் கால்வாயிலிருந்து வெளியேறி மற்ற கப்பல்களுக்கு வழிவிட்டது.
ஆனால், எதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்பதை அறிவதற்காக விசாரணை அதிகாரிகள் விசாரணையைத் துவங்கியுள்ள நிலையில், அந்த கப்பலில் பணியாற்றும் இந்தியர்கள் மீது பழியைத் தூக்கிப் போட திட்டமிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கப்பலில் 25 இந்திய பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும், விசாரணை முடிவடையும் வரை வீட்டுக்காவலில் அடைக்கப்படலாம் என்றும் யூனியன் அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், இந்த பிரச்சினைக்கு மனித தவறு காரணமா என்பதை அறிவதற்காக, கப்பலை செலுத்திய இரண்டு எகிப்திய பைலட்களும் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்கள்.
என்றாலும், கப்பலில் பணியாற்றும் இந்திய பணியாளர்கள் அலட்சியமாக பணியாற்றியதால் பிரச்சினை ஏற்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டப்படலாம் என்றும், சிறையிலடைக்கப்படலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில், இந்திய பணியாளர்கள் பலிகடா ஆக்கப்படும் அபாயம் உள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது என கப்பல் துறையிலுள்ள மூத்த உறுப்பினர் ஒருவர் The Times of India பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.



