ஒரு கை பார்ப்போம்... ஆயுதங்கள் வாங்கி போருக்கு தயாராகும் உக்ரைன் தாயார்
ரஷ்ய துருப்புகள் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தலாம் என்ற நிலையில் தாயார் ஒருவரின் செயல் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உக்ரைன் எல்லையில் துருப்புகளையும் ஆயுதங்களையும் குவித்து மிரட்டல் விடுத்து வருகிறது ரஷ்யா. ரஷ்யாவின் இந்த முடிவால் மூன்றாவது உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைனிய தாயார் ஒருவர் போருக்கான ஆயுதங்கள் உடைகள் என தயாராகி வருவது வெளியாகியுள்ளது. மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான 56 வயது Mariana Zhaglo என்பவரே ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக தயாராகி வருகிறார்.
இதற்காக சுமார் 1300 டொலர் செலவிட்டு துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். சிறந்த துப்பாக்கியைப் பற்றி ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்ட பிறகு அவர் குறித்த துப்பாக்கியை வாங்கியுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் தமது பிள்ளைகளை ஈடுபடுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தம்மால் முடிந்த அளவுக்கு உதவ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு நிகழும் என்றால், நாட்டுக்காகவும் குடியிருக்கும் நகருக்காகவும் போராட தாம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி இரண்டு வார கால பயிற்சிக்கும் சென்று திரும்பியுள்ளார் குறித்த தாயார். மேலும், தேவைக்கு அதிகமான துப்பாக்கி தோட்டாக்களும் உணவும் தற்போதே சேமித்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீப நாட்களாக உக்ரைனில் சாதாராண மக்களும் தாமாகவே முன்வந்து ராணுவ பயிற்சிகள் முன்னெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.