பழி ஓரிடம்... பாவம் ஓரிடமா?: சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கிய பிரச்சினையில் தேவையில்லாமல் இழுக்கப்படும் ஒரு இளம்பெண்ணின் பெயர்
பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பார்கள் அதுபோல், சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட கப்பல் ஒன்று சிக்கி நின்ற பிரச்சினையில் தேவையில்லாமல் ஒரு இளம்பெண்ணின் பெயர் இழுக்கப்படுகிறது.
எகிப்தின் முதல் பெண் கேப்டன் Marwa Elselehdar (29). சூயஸ் கால்வாயில் சிக்கி நின்ற எவர் கிவன் கப்பலை தவறாக இயக்கி போக்குவரத்தை பாதித்தது Marwaதான் என போலிச் செய்திகளும் வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், சம்பவம் நடந்தபோது, அலெக்சாண்ட்ரியா என்ற இடத்தில் Aida IV என்ற கப்பலை செலுத்திக்கொண்டிருந்தார் அவர்.
இணையத்தில் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களும், போலி சமூக ஊடக கணக்குகளும், தனது நற்பெயரைக் கெடுத்துவிடுமோ என அச்சம் தெரிவித்துள்ளார் Marwa.
ஆண்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு கப்பற் பயிற்சி அகாடமியில், சட்ட ரீதியாக தடைகளைத் தாண்டி இணைந்து இன்று வெற்றிகரமான கேப்டனாக பவனி வருபவர் Marwa.
ஆனல், இந்த வதந்திகளும் போலிச் செய்திகளும், தான் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்தை வீணாக்கிவிடுமோ என அஞ்சுகிறார் Marwa.
எவர் கிவன் கப்பல் பிரச்சினையை தான் உருவாக்கியதாக வெளியான செய்திகளைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், தான் ஒரு பெண் என்பதாலோ அல்லது எகிப்திய நாட்டவர் என்பதாலோ தான் குறிவைக்கப்படுவதாகவும் கருதுகிறார் Marwa.
தான் பயிற்சி பெறும்போதே பெண் என்பதால் பல பிரச்சினைகளை சந்தித்ததாகவும், பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெகு தூரத்தில், நீண்ட காலத்துக்கு கடலில் வேலை செய்வதை தம் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இப்போது கூட ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் என்றும் கூறுகிறார் அவர்.
சர்வதேச அளவில் கப்பலில் பணியாற்றுவோரில் வெறும் இரண்டு சதவிகிதத்தினரே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


