நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று(மார்ச் 20ம் திகதி) தொடங்குகிறது.
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது, இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கான வாக்குபதிவு ஏப்ரல் 19ம் திகதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று முதல் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்யலாம், 27ம் திகதி வரை வழங்கலாம்.
28ம் திகதி தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும், மனுக்களை வாபஸ் பெற 30ம் திகதி கடைசிநாளாகும்.
அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னம் ஒதுக்கப்படும்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறுகையில், வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரால் காலை 11 மணிமுதல் 3 மணிவரை தாக்கல் செய்யலாம்.
வேட்பாளரின் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு, அதுவும் மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவுக்குள் இருக்க வேண்டும், வேட்பாளர் உட்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
மனுத்தாக்கல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும், பொது வேட்பாளராக இருந்தால் ரூ.25,000, ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் ரூ.12,500 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனுவில் ஏதேனும் தவறு இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலர் அதுதொடர்பாக வேட்பாளரிடம் தெரிவிப்பார்.
அதை சரிசெய்து மனுதாக்கலின் கடைசி நாளுக்குள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.