தங்கள் மண்ணில் அணு ஆயுதங்களுக்கு அனுமதி: ஐரோப்பிய நாடொன்றின் திடீர் முடிவு
அணு ஆயுதங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவை எடுக்க பின்லாந்து திட்டமிட்டுள்ளது.
அணு ஆயுதங்களுக்கு அனுமதி
பல தசாப்தங்களாக நடுநிலை கொள்கையில் இருந்து வந்த பின்லாந்து, தங்களுடைய மண்ணில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.
நேட்டோ நட்பு கூட்டமைப்பு நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும் தடுப்பு கொள்கைகளுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு மேற்கொள்ளப்பட உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதே பின்லாந்தின் இந்த முக்கிய கொள்கை மாற்றத்திற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.
நேட்டோவில் அங்கம்
இது தொடர்பாக பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் வழங்கிய தகவலில், ஐரோப்பாவின் பாதுகாப்பு சூழல் மாறி விட்டதாக தெரிவித்தார்.
ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பின்லாந்து, ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு 2023ம் ஆண்டு ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைந்தது.
இந்நிலையில் பின்லாந்து நேட்டோவின் அணுசக்தி பாதுகாப்பு குடையின் கீழ் முழுமையாக செயல்பட வேண்டி அணு ஆயுதத் தடையை நீக்க முடிவு செய்துள்ளது.
பின்லாந்தின் 1987ம் ஆண்டு அணுசக்தி சட்டத்தின் படி, பின்லாந்து மண்ணில் அணு ஆயுதங்களை வைத்து இருப்பது, தயாரிப்பது அல்லது வெடிக்க செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |