உலகின் இளம் பிரதமர் - பதவி விலகும் நிலையில் விவாகரத்து அறிவிப்பு
உலகின் இளைய பிரதமர் என அறியப்படும் பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது விவாகரத்து செய்தியை அறிவித்துள்ளார்.
பின்லாந்து பிரதமரின் விவாகரத்து செய்தி
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (Sanna Marin), தனது சமூக வலைதளத்தில், தானும் தனது கணவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.
பின்லாந்தில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, வரும் செப்டம்பர் மாதம் சமூக ஜனநாயகக் கட்சியின் (SDP) தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக மரின் கூறியிருந்தார்.
HANNIBAL HANSCHKE//GETTY IMAGES
இந்நிலையில், அவரும் அவரது கணவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக புதன்கிழமை (மே 10) அறிவித்தார்.
நண்பர்களாக இருப்போம்
சன்னா மரின் 2020-ஆம் ஆண்டு மார்கஸ் ரைக்கோனனை (Markus Raikkonen) மணந்தார், மேலும் அவர்களது திருமணம் மொத்தம் 3 ஆண்டுகள் நீடித்தது. ஆனால், இருவரும் கடந்த 19 ஆண்டுகளாக உறவில் இருந்தனர். மேலும், இந்த ஜோடிக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இருவரும் அவரவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "நாங்கள் கூட்டாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். 19 ஆண்டுகள் ஒன்றாக இருந்ததற்கும் எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து சிறந்த நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும், அன்பான பெற்றோராகவும் இருப்போம்." என்று பதிவிட்டுள்ளார்.
Image: EPA-EFE / Kimmo Brandt
சன்னா மரின்
தற்போது 37 வயதாகும் சன்னா மரின், 2019-ல் பதவியேற்றபோது உலகின் இளைய பிரதம மந்திரி ஆனார். முற்போக்கான புதிய தலைவர்களுக்கு முன்மாதிரியாக அவர் கருதப்படுகிறார். சமீபத்திய தேர்தலில், வலதுசாரி எதிர்க்கட்சியான தேசிய கூட்டணிக் கட்சித் தலைவர் பெட்டேரி ஓர்போ வெற்றி பெற்றதால், மரின் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகுவதாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில், தனது மக்களுடன் நேரத்தை செலவிடுவதாகவும் தெரிவித்தார்.
பின்லாந்து சமீபத்தில் வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பில் (NATO) உறுப்பினரானதில் அவருக்கு மிகமுக்கிய பங்கு உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது சிறந்த தலைமைத்துவ குணங்களை கொண்ட தலைவராகவும் அவருக்கு பெருமை உள்ளது.
Getty Images
ஆனால், அவருக்கு சில வீழ்ச்சிகளும் இருந்தன. கடந்த ஆண்டு அவரது தனிப்பட்ட வீடியோக்கள் சில சமூக ஊடக தளங்களில் கசிந்தபோது மக்களிடையே விமர்சனங்களையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டார். அதில் அவர் தனது நண்பர்களுடன் பார்ட்டியில் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தவறு செய்ததற்கான சந்தேகங்களைத் துடைக்க மருத்துவ பரிசோதனை கூட எடுக்க வேண்டியிருந்தது.