அணுக்கழிவை 100,000 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக புதைக்க திட்டமிட்டுள்ள உலகின் முதல் நாடு
ஐரோப்பிய நாடொன்று உலகில் முதல் முதல்முறையாக, அணுக்கழிவை 100,000 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக புதைக்க திட்டமிட்டுள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை கொண்டிருக்கும் பின்லாந்து, உலகில் முதல்முறையாக நிரந்தர அணு கழிவு சேமிப்பு திட்டத்தை தொடங்கவுள்ளது.
பின்னிஷ் மொழியில், ஒன்காலோ (Onkalo) எனப்படும் இந்த குகை, தென்மேற்கு பின்லாந்தின் Eurajoki பகுதியில் 433 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.

1.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் வெட்டப்பட்ட இந்த குகை, அணு மின் நிலையங்களில் இருந்து வரும் ஆபத்தான கழிவுகளை பாதுகாப்பாக வைக்க உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, அணு கழிவுகள் தற்காலிக நீர்த் தொட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆபத்தான கதிர்வீச்சை வெளியிடும் என்பதால், நிரந்தர தீர்வு தேவைப்படுகிறது. அதேசமயம், ஒன்காலோவில் 6,500 டன் யுரேனியத்தை வைக்க இடம் உள்ளது.
கழிவுகள் முதலில் துருப்பிடிக்காத தாமிர குப்பிகளில் (copper canisters) அடைக்கப்படும். பின்னர், அவை பாறைகளில் வெட்டப்பட்ட குழிகளில் வைக்கப்பட்டு, bentonite களிமண் மூலம் மூடப்படும்.
இந்த திட்டம் 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கான செலவு சுமார் 1 பில்லியன் யூரோ. 100 ஆண்டுகள் கழிவுகளை சேமித்த பின், குகை முழுவதும் மூடப்பட்டு, குறைந்தது 100,000 ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

பின்லாந்தின் அணு பாதுகாப்பு அமைப்பு (STUK) இறுதி அனுமதி வழங்கிய பின், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான பின்லாந்து மக்கள் இந்த திட்டத்தை ஆதரிக்கின்றனர். அணு மின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் சிறிய அணு உலைகளின் கழிவுகளை எவ்வாறு கையாளுவது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |