கர்னல் சோபியாவை பயங்கரவாதிகளின் சகோதரி என கூறிய பாஜக அமைச்சர் - நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
கர்னல் சோபியா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்னல் சோபியா குரேஷி
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் ராணுவ அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
அமைச்சர் சர்ச்சை பேச்சு
இந்நிலையில், கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அமைச்சர், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்துக்களின் ஆடைகளை கழற்றி கொன்றார்கள். ஆனால், மோடி, அவர்களின் சகோதரியை (சோபியா குரேஷி) அனுப்பி அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பேசியிருந்தார்.
சோபியா குரேஷி இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளன.
भाजपा की मध्य प्रदेश सरकार के एक मंत्री ने हमारी वीर बेटी कर्नल सोफिया क़ुरैशी के बारे में बेहद अपमानजनक, शर्मनाक और ओछी टिप्पणी की है।
— Mallikarjun Kharge (@kharge) May 13, 2025
पहलगाम के आतंकी देश को बाँटना चाहते थे, पर आतंकवादियों को मुंहतोड़ जवाब देने में पूरे ‘ऑपरेशन सिंदूर’ के दौरान देश एकजुट था।
BJP-RSS की…
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தனது பேச்சிற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் குன்வார் விஜய் ஷா “நான் பேசியதை சிலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன்.
கனவில் கூட அவரை அவமதிப்பதைப் பற்றி நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாது. இருப்பினும், என் வார்த்தைகள் சமூகத்தையும் மதத்தையும் புண்படுத்தியிருந்தால், 10 முறை மன்னிப்பு கேட்கவும் நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
வழக்குப்பதிவு
கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பேசிய பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மாநில டிஜிபிக்கு மத்திய பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழங்குடி விவகாரங்கள் மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை அமைச்சராக உள்ள குன்வார் விஜய் ஷா, கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இவர் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை இல்லை. முன்னதாக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் மனைவி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தற்காக, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |