நடுங்க வைத்த கேபிள் கார் விபத்து... சகோதரிக்கு பெண் மருத்துவர் கடைசியாக அனுப்பிய அந்த குறுந்தகவல்
இத்தாலியில் 14 உயிர்களை பலி வாங்கிய கேபிள் கார் விபத்தில் சிக்கிய இரு தம்பதிகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் Mottarone மலை உச்சியில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 14 பேர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி பலியான இரு தம்பதிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரும் மருத்துவர் Roberta Pistolato தமது காதலர் Angelo Gasparro உடன் இந்த விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
தமது 40-வது பிறந்தநாளை காதலருடன் கொண்டாடிய Roberta Pistolato, விபத்து நடக்கும் ஒரு மணி நேரம் முன்னர் தமது சகோதரிக்கு, தாங்கள் கேபிள் காரில் தற்போது ஏறியுள்ளோம் என கடைசியாக குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதேப்போன்று, நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடியான Silvia Malnati (27) மற்றும் Alessandro Merlo(29) ஆகிய இருவரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
மேலும், இத்தாலியில் வாழும் இஸ்ரேலிய குடும்பம் ஒன்றும் தங்களின் 5 உறுப்பினர்களை இந்த விபத்தில் இழந்துள்ளது. இந்த ஐவரில் 81 வயது மூதாட்டி ஒருவரும் 2 வயது சிறுவன் ஒருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய 9 வயது சிறுவன் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, இந்த விபத்தில் உயிருடன் தப்பியுள்ள 5 வயது சிறுவன் ஒருவர், தலை, மார்பு மற்றும் கால்களில் பலத்த காயமுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கேபிள் கார் Maggiore ஏரியின் கரையில் உள்ள Stresa-விலிருந்து மொட்டரோன் உச்சிக்கு பயணித்துள்ளது. Stresa-விலிருந்து மொட்டரோன் உச்சிக்கு கேபிள் காரில் செல்ல சுமார் 20 நிமிங்கள் ஆகும்.
இந்த நிலையில் 4,900 அடி உயரத்தில் இருந்து அந்த கேபிள் கார் அறுந்து விழுந்து மரங்களில் மோதியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணைக்கு நகர நிர்வாகம் மற்றும் மாகாண நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது.