ரஷ்யாவுடன் இன்னும் நெருக்கமாகும் வடகொரியா... முதல் முறையாக புதிய முயற்சி: வெளியான அறிவிப்பு
வட கொரியாவும் ரஷ்யாவும் தங்கள் உறவை வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலை இணைப்பைக் கட்டத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளன.
துமங்காங் சாலை
எல்லையில் அமைந்துள்ள நதியின் மீது பாலம் கட்டுவதை ஒரு பெரிய வளர்ச்சியாகப் பாராட்டி, இரு நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கிலோமீற்றர் நீளமுள்ள துமங்காங் சாலைப் பாலமானது கட்டி முடிக்க 18 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டமானது மக்களின் எல்லை கடந்த பயணம், சுற்றுலா மற்றும் பொருட்களின் புழக்கத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ரஷ்ய மற்றும் வட கொரிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளும் பரிமாற்றத் திட்டங்களும் சமீபத்திய ஆண்டுகளில் செழித்து வருகின்றன. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை ஆதரிக்கும் வட கொரியா வெடிமருந்துகளையும் துருப்புக்களையும் வழங்குகிறது.
வியாழக்கிழமை, வட கொரியாவும் ரஷ்யாவும் ஒரே நேரத்தில் துமென் ஆற்றின் இருபுறமும் உள்ள அந்தந்த எல்லை நகரங்களான துமங்காங் மற்றும் காசனில் பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தின.
இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று நினைவுச்சின்னமாக இந்தப் பாலத்தின் கட்டுமானம் நினைவுகூரப்படும் என்று வட கொரியப் பிரதமர் பாக் தே சாங் கூறினார். இது ரஷ்ய-கொரிய உறவுகளுக்கு ஒரு பெரிய மைல்கல் என்று ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவுக்கு நன்றி
கடந்த ஆண்டு உக்ரேனியப் படைகள் கைப்பற்றிய குர்ஸ்க் பிராந்தியத்தின் சில பகுதிகளை மீட்டெடுக்க உதவுவதற்காக ரஷ்யாவிற்கு போர் துருப்புக்களை அனுப்பியதாக வடகொரியா முதல் முறையாக உறுதிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு துமங்காங் திட்டம் தொடர்பில் இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வட கொரியாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, ரஷ்யாவுக்காக வட கொரிய வீரர்களின் தியாகங்களை மறக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
தென் கொரிய அரசாங்க உளவுத்துறை மதிப்பீட்டின்படி ரஷ்யாவிற்கு சுமார் 15,000 வீரர்களை வட கொரியா அனுப்பியுள்ளது, அவர்களில் 4,700 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |