பேருந்தில் நடிகையிடம் ஆபாச செய்கை: ஜாமீனில் வந்தவருக்கு பூமாலை வரவேற்பு
கேரள மாநில அரசுப் பேருந்தொன்றில் மொடலும் நடிகையுமான நந்திதா சங்கராவின் பக்கத்தில் அமர்ந்திருந்த 28 வயதான சாவத் ஷா என்னும் இளைஞன் ஆபாசமாக நடந்து கொண்ட விடயம் மிகவும் வைரலானது.
நந்திதா சங்கராவுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் நடுவில் அமர்ந்திருந்த குறித்த இளைஞர் முதலில் நந்திதாவிடம் சாதாரணமாக பேச்சு கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது வேலையை காட்டத் தொடங்கியுள்ளார், சிறிது நேரத்தின் பின்னர் ஆபாசமாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து இதை அவதானித்த நடிகை நந்திதா, உடனடியாக அந்த இளைஞன் செய்த செயலை தனது செல்ஃபோனை எடுத்து ஃபேஸ்புக்கில் அதனை லைவ் வீடியோவாக பதிவு செய்தார்.
இதனைப் பார்த்த அந்த இளைஞர் சாவத் ஷா அங்கிருந்து வெளியேற முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து நடிகை நந்திதா, பேருந்தில் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பேருந்து நடத்துனர் அருகில் வந்து விசாரித்துக் கொண்டிருக்கும்போதே பக்கவாட்டில் உள்ள கதவின் வழியாக குறித்த இளைஞர் வெளியேற முயற்சி செய்துள்ளார்.
பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓட முயற்சி செய்த இளைஞரை பேருந்து நடத்துனர் பிடித்து, அடித்து, உதைத்து நெரும்பஞ்சேரி காவல் நிலையத்தில் அந்த இளைஞனை ஒப்படைத்துள்ளார். நடிகை நந்திதா இளைஞர் மீது புகார் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி சாவத் ஷா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஜாமீன் கிடைத்து அவர் வெளியே வந்தபோது, அவருக்கு பூமாலை போட்டு, 'கேரளா ஆண்களுக்கான உரிமை சங்க' தலைவர் தலைமையில் பல ஆண்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி விட்டது.
இந்த பூமாலையுடனான வரவேற்பின் பின்னரே குறித்த சம்பவம் இன்னும் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை நந்திதா இந்த விவகாரம் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 'பெண்கள் முன்னால் இவ்வாறு ஆபாசமாக நடக்கும் ஆண்கள் மீது பெண்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டக்கூடாது என்று இந்த ஆண்கள் சங்கம் விரும்புகிறீர்களா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
'தன்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை என்றும், தொடர்ந்து வரும் அச்சுறுத்தல்களால் அவரது சமூக வலைத்தளப் பக்கங்களை திறக்க முடியவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து குறிப்பிட்ட ஆண்கள் குழு தெரிவித்ததாவது, 'அந்தப் பெண்ணுக்கே முதலில் ஆதரவு தெரிவித்தோம். ஆனால், அது பொய் புகார் என்று தெரிந்த பின்னரே சாவத் ஷாவுக்கு ஆதரவு கொடுப்பதாக' கூறியுள்ளனர்.