குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி விடு... ஜனாதிபதி ஒருவருக்கு ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை
வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதை அறிவிப்பதற்கு முன்பு, அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதை ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற
மதுரோவுடன் விவாதித்தது குறித்தும் வெளிப்படுத்தியுள்ள ட்ரம்ப், அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே முழுமையான போர் மூளும் முன்னர், மதுரோ தனது குடும்பத்தினருடன் தப்பிச் செல்ல வாய்ப்பளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் மற்றும் மகனுடன் நாட்டை விட்டு வெளியேற பாதுகாப்பான பாதையை உருவாக்கித்தர ட்ரம்ப் தொலைபேசி உரையாடலின்போது உறுதி அளித்துள்ளார்.
பதிலுக்கு, மதுரோ உடனடியாக ராஜினாமா செய்து, அவரது ஆதரவாளர்களுடன் உடனடியாக வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.
மதுரோ அவரது குடும்பம் மற்றும் ஆதரவாலர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினால், போருக்கான வாய்ப்பில்லை என்றே ட்ரம்ப் தரப்பு கூறுகிறது.
மட்டுமின்றி, மதுரோ வெளியேறிவிட்டால், ஜனநாயக ஆட்சியை மீட்டெடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்றே தெரிவிக்கின்றனர். ஆனால் ட்ரம்பின் இறுதி எச்சரிக்கையை மதுரோ நிராகரித்துள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.

இந்த நிலையில், வெனிசுலா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியானதும், ஜனாதிபதி மதுரோவின் விமானம் கராகஸிலிருந்து பிரேசில் எல்லைக்கு பறந்ததாக உடனடியாக தகவல்கள் வெளியானது.
ட்ரம்ப் நிர்வாகம்
பின்னர் அந்த விமானம் மீண்டும் கராகஸுக்குத் திரும்பியுள்ளது. அந்த விமானம் வெனிசுலா அரசுக்குச் சொந்தமான கான்வியாசா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் ஏர்பஸ் A319 என்றே தகவல் வெளியாகியுள்ளது.

அந்த விமானம் பிரேசிலின் எல்லையிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள Santa Elena de Uairén விமான நிலையத்தில் தரையிறங்கி, சில மணி நேரங்களில் கராகஸுக்குத் திரும்பியது.
பொதுவாக அந்த விமானம் ஜனாதிபதி மதுரோ மட்டுமே பயன்படுத்துவதால், சந்தேகம் வலுத்துள்ளது. ஆனால் மதுரோ அந்த விமானத்தில் பயணப்பட்டாரா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் மதுரோவுக்கு தொடர்பிருப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சோசலிச வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |