கொரோனா தொற்றை பரப்பிய விமான ஊழியர்: 2000 பேர்களை சோதனை செய்த நகர நிர்வாகம்
வியட்நாம் நாட்டு விமான ஊழியர் ஒருவர் கொரோனா நோய் தொற்றைப் பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வியாட்நம் விமான சேவை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் 29 வயதான Duong Tan Hau.
இவர் கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும், கொரோனா தொற்றினை மக்களிடத்தில் பரப்பியதாகவும் வியாட்நம் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டு 2 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
ஹவ் கடந்த நவம்பர் மாதம் தமக்கு கொரோனா பாதிப்பு உறுதியான பின்னர் தனது 14 நாட்கள் தனிமைப்படுத்தலை மீறியதாகவும், ஜப்பானில் இருந்து வியட்நாமுக்கு வந்த விமானத்தில், தமது பணி முடிந்த பின்னர் பொதுமக்கள் 46 பேர்களை சந்தித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த காலகட்டத்திலும் ஹவ், தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை தவறாமல் சந்தித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஹவ் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ள காரணத்தால் சுமார் 2,000 பேர்களுக்கு நகர நிர்வாகத்தால் கொரோனா சோதனை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதற்கு மட்டும் நகர நிர்வாகத்திற்கு சுமார் 194,192 டொலர் தொகை செலவானதாகவும் விசாரணை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி ஹவ் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. வியாட்நாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2,600 ஆகவும் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 35 ஆகவும் குறைந்து வருகிறது.
இந்த சூழலில் தொற்றைப் பரப்பும் விதமாக விமான ஊழியரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று வியாட்நாம் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.