இறுகும் நெருக்கடி... ஏதன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் நிறுத்தம்
யேமனில் உள்ள தெற்கு இடைக்கால கவுன்சில் அமைப்பிற்கும், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கத்திற்கும் இடையே தொடரும் பதட்டங்களுக்கு மத்தியில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தனி நாட்டை உருவாக்க
வெளியான தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை முதல் ஏதன் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், விமானச் செயல்பாடுகள் மற்றும் அவை மீண்டும் தொடங்குவது குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த 2015 முதல் யேமனின் பெரும் பகுதிகளை ஹவுதிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு எதிராகப் போராடி வரும் சவுதி தலைமையிலான கூட்டணியில், தெற்கு இடைக்கால கவுன்சில் அமைப்பும் முறையாக ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
ஆனால், தெற்கு இடைக்கால கவுன்சில் அமைப்பும் தெற்கு யேமனில் ஒரு தனி நாட்டை உருவாக்க முயல்கிறது, மேலும் டிசம்பர் மாதத்தில், சவுதி அரேபியாவை ஒட்டியுள்ள ஹத்ரமௌத் மற்றும் அல்-மஹ்ரா மாகாணங்களில் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.
இது அப்பகுதியில் கடும் பதட்டங்களுக்கு வழி வகுத்தது. ஹவுதிகளுக்கு எதிரான கூட்டணியில் செயல்படும் ஐக்கிய அரபு அமீரகம் தெற்கு இடைக்கால கவுன்சில் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்குவதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டியுள்ளது.
ஹத்ரமௌத் மற்றும் அல்-மஹ்ரா மாகாணங்களில் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த தெற்கு இடைக்கால கவுன்சில் அமைப்புக்கு உதவுவதாகவும், இது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் சவுதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், அது சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏதன் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ஜெத்தாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய நிபந்தனைகளை சவுதி அரேபியா விதித்ததே விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்தத் தடைக்குக் காரணம் என்று யேமன் அரசாங்கம் கூறியுள்ளது.
இதன் நோக்கம்
இது அதிர்ச்சியளிப்பதாக யேமன் அரசாங்கம் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்தக் கட்டுப்பாடு ஏதன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே இயக்கப்படும் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சவுதி அதிகாரிகள் பின்னர் தெளிவுபடுத்தினர்.
விமானங்களை கட்டுப்படுத்துவதில் சவுதி ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல்களை அந்த நாடு மறுத்துள்ளதுடன், ஜனாதிபதி தலைமைத்துவ கவுன்சில் தலைமையிலான ஏமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறுகிறது.

உண்மையில், தெற்கு இடைக்கால கவுன்சில் அமைப்பின் பண முறைகேடுகளை ஒடுக்குவதே இதன் நோக்கம் என யேமன் ஜனாதிபதி ஆலோசகர் விளக்கமளித்துள்ளார்.
விமானப் போக்குவரத்தை முழுமையாக நிறுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கவில்லை என்றும், விமானப் போக்குவரத்து தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |