நாணயம் சுண்டி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்: அமெரிக்க உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்யம்
Florida's Atlantic beach city election viral result: அமெரிக்காவில் உள்ளாட்சித் தேர்தலில் நாணயம் சுண்டும் முறை மூலம் பெண் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
நாணயம் சுண்டி வெற்றி பெற்ற வேட்பாளர்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் நாணயம் சுண்டும் முறை மூலம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
புளோரிடாவின் அட்லாண்டிக் பீச் நகரின் ஆணையத்திற்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது ஜெனிபர் லாக்னர்(Jennifer Lagner) என்ற வேட்பாளரும், அவரை எதிர்த்து போட்டியிட்ட லிசா ஹெரால்ட்(Lisa herrold) என்ற வேட்பாளரும் தலா 3,162 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்துள்ளனர்.

புளோரிடா தேர்தல் சட்ட நடைமுறைப்படி, தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்கள் சமமான நிலையில் இருந்தால் குலுக்கல் மற்றும் நாணயம் சுண்டும் முறை மூலம் தேர்தல் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க அனுமதி உண்டு.
இந்நிலையில் வேட்பாளர்களான ஜெனிபர் லாக்னர் மற்றும் லிசா ஹெரால்ட் வெற்றியாளரை தேர்வு செய்ய நாணயம் சுண்டும் முறைக்கு ஒப்புக் கொண்டனர்.

அதன்படி இரண்டு முறை நாணயம் சுண்டப்பட்டு ஜெனிஃபர் லாக்னர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.