வடகொரிய ஜனாபதி கிம்முக்கு ரகசியமாக கப்பம் கட்டிய பிரபல கால்பந்து வீரர்: பின்னர் நடந்த அதிரடி சம்பவம்
வட கொரியாவின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என அறியப்பட்ட பிரபல கால்பந்து வீரர், ஐ.நா. மன்றத்தின் பொருளாதாரத் தடைகளை மீறியதாக கூறி சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
ஜுவென்டஸ் அணியின் முன்னாள் வீரரான 22 வயது ஹான் குவாங்-சாங் என்பவரே தற்போது சர்வதேச நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.
சமீபத்தில் கட்டார் கால்பந்து அணியான அல்-துஹைலுக்காக விளையாடி வந்தவர் ஹான் குவாங்-சாங்.
இவருக்கு மாதம் 80,000 பவுண்டுகள் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமது ஊதியத்தின் பெரும்பகுதியை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நிர்வாகத்திற்கு இவர் ரகசியமாக கப்பம் கட்டியதாக பகீர் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடகொரிய கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வட கொரியாவின் கிறிஸ்டியானோ ரொனால்டோ எனவும் அறியப்பட்ட ஹான்,
சர்வதேச அளவில் பிரபலமான லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல் மற்றும் எவர்டன் ஆகிய ஏதேனும் ஒரு அணியில் பெருந்தொகை ஊதியத்தில் இணைவார் என்றே பேசப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு கட்டார் கால்பந்து அணியான அல்-துஹைல் முந்திக் கொண்டதுடன், அதிக சலுகைகளும் அளித்தது.
தற்போது, வடகொரியா மீதான ஐ.நாவின் பொருளாதாரத் தடைகளை ஹான் மீறியதாக நிபுணர்கள் தரப்பு கண்டுபிடித்ததை தொடர்ந்து, அல்-துஹைல் அணி நிர்வாகம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
வடகொரிய நிர்வாகத்தின் கடுமையான நிர்பந்தங்களுக்கு பயந்தே ஹான் தமது ஊதியத்தின் பெரும்பகுதியை, அதாவது வாரம் 20,000 பவுண்டுகள் வரை ரகசியமாக கப்பம் கட்டியிருக்கலாம் என நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
2017-ல் வடகொரியா மீது ஐ.நா.மன்றம் பொருளாதாரத் தடை விதித்த நிலையில், வெளிநாடுகளில் ஊதியம் பெறும் வடகொரியர்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு திரும்ப வேண்டும் என கிம் ஜாங் நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால் இத்தாலி அணிக்காக அதுவரை விளையாடி வந்த ஹான், நாடு திரும்பாமல் கட்டார் அணியுடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டார்.
மொத்தம் 5 ஆண்டுகளூக்காக ஒப்பந்தம் செய்து கொண்ட ஹான், சுமார் 3.8 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் ஈட்டியிருப்பார் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, மிக விரைவில் அல்-துஹைல் அணி நிர்வாகம் அவருக்கு 120,000 பவுண்டுகள் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
மாத ஊதியம் தவிர பிற சலுகைகள் ஏராளம் வழங்கப்பட்டிருந்தது. மேலும், தமது ஊதியத்தில் இருந்து சிறு தொகை கூட வடகொரியாவுக்கு அனுப்புவதில்லை என்ற உறுதியும் ஹான் அளித்துள்ளார்.
தற்போது ஹான் ரகசியமாக வடகொரியாவுக்கு கப்பம் கட்டியுள்ள தகவல் அம்பலமாகியுள்ள நிலையில், அவர் வடகொரியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்றே கூறப்படுகிறது.

