தங்கையின் திருமணத்திற்காக…வங்கியின் ஏடிஎம்-யை உடைக்க முயன்ற இளைஞர் கைது
காரைக்காலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற விக்னேஷ்(24) என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ATM-மில் கொள்ளை முயற்சி
காரைக்கால் மாவட்டத்தில் பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஏடிஎம் இயந்திரத்தை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கிய அந்த மர்ம நபர், வெகு நேரம் ஆகியும் முழுமையாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முடியாமல் போனதால், ஆத்திரத்தில் அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துள்ளார்.
இதற்கிடையில் ஏடிஎம் உடைக்கப்படுவது தொடர்பாக இ-சர்வைலன்ஸ் சேவையின் மூலம் வங்கி மேலாளருக்கு எச்சரிக்கை தகவல் சென்றடையவே, வங்கி மேலாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
தங்கையின் திருமணத்திற்காக கொள்ளையில் இறங்கிய அண்ணன்
காரைக்கால் பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணையில் வங்கி ஏடிஎம்-யை அடித்து நொறுக்கி கொள்ளையடிக்க முயன்றது, நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பதும், அவரது தங்கையின் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில், மது போதையில் ஏடிஎம்-யை கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தங்கையின் திருமண செலவுக்காக வங்கி ஏடிஎம்-யை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரின் செயல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஏடிஎம் இயந்திரம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.