துருக்கியில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: வெளியாகியுள்ள நல்ல செய்தி
துருக்கியில் பணி அனுமதி பெறாமல் வெளிநாட்டினர் பணியாற்ற முடியும்.
புதிய வேலைவாய்ப்பு ஆணையை அமுல்படுத்திய துருக்கி அரசு.
துருக்கியில் வேலைக்கு சென்ற வெளிநாட்டினருக்கு அந்த நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் நல்ல செய்தி ஒன்றை வழங்கியுள்ளது.
துருக்கியில் வெளிநாட்டினர் பணி அனுமதி இல்லாமல் பணிபுரிவதை எளிதாக்கும் வகையிலான புதிய வேலைவாய்ப்பு ஆணையை துருக்கி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதனடிப்படையில் வெளிநாட்டு விவசாயிகள், கல்வியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு துருக்கியில் பணி அனுமதி பெறாமல் பணியாற்ற முடியும் என துருக்கி தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அந்த ஆணையில் பருவ கால விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு ஆறு மாதங்கள் வரை பணி அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அறிவியல் ஆராய்ச்சிக்காக பல்கலைக்கழகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் படிக்கும் வெளிநாட்டவர் அல்லது தங்களின் அறிவு மற்றும் அனுபவத்தை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இரண்டு ஆண்டு விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் வேலை ஒப்பந்தங்கள் முடியும் வரை வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் தங்கள் தொழில்களை தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துருக்கியின் உள்துறை அல்லது வெளியுறவு துறையால் வெளிநாட்டில் வசிக்கும் துருக்கிய வம்சாவளியை சேர்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டவர்கள், அனுமதியின்றி மூன்று மாதங்கள் வரை துருக்கியில் பணியாற்ற முடியும். மாணவர் பரிமாற்ற திட்டங்களின் கீழ் பயிற்சி பெறுபவர்கள் நான்கு மாதங்கள் வரை வேலை செய்ய முடியும்.
கூடுதல் செய்திகளுக்கு; எலான் மஸ்க்கின் வலது கரமாகும் சென்னை இளைஞர்: ட்விட்டரில் அசத்தப்போகும் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் யார்?
துருக்கிக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான நிதி ஒத்துழைப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட வெளிநாட்டினரும் இந்த ஆணையில் பயனடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.